திருவண்ணாமலையில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலையில் ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலையில் நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட பிரிவு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ஜெய்சங்கர், மாவட்ட துணைத்தலைவர் தனசேகர், மாவட்ட இணை செயலாளர் அன்பரசன், மாவட்ட துணைத்தலைவர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் மகாதேவன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் சேகர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அவர் பேசும்போது, மத்திய அரசு வழங்கியது போல் 1.7.2022 முதல் நிலுவையுடன் கூடிய அகவிலைப்படி வழங்க வேண்டும். நியாயவிலைக் கடையில் சரியான எடையில் பொருட்கள் பொட்டலமாக வழங்க வேண்டும். பொது விநியோகத் திட்டத்திற்கு தனித்துறை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், பழைய ஓய்வூதியம், அனைத்து பணியாளர்களுக்கும் ஓய்வூதியம், 1.4.2003 முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊராட்சி தூய்மை காவலர்களுக்கு நேரடியாக நிர்வாகமே ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில், நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் துரிஞ்சாபுரம் வட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்