திருவண்ணாமலை: பகவான் ரமண மகரிஷி ஆராதனை விழா

சிறப்பு அலங்காரத்தில் பகவான் ரமணர்
திருவண்ணாமலை ரமணாஸ்ரமத்தில் நேற்று பகவான் ரமணரின் 74ம் ஆண்டு மகா ஆராதனை நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
திருவண்ணாமலை... நினைத்தாலே முக்தி தரும் தவபூமி என்பார்கள். இங்கு வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற மகான்கள் ஏராளம். அப்படிப்பட்ட புண்ணிய பூமியில் இரு மகான்கள் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தனர். அவர்கள் இருவரும் ஒருவரைக் குறித்து ஒருவர் மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் மகான் ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகள்.
திருவண்ணாமலையே இனி தன் வாசஸ்தலம் என்று பகவான் ரமண மகரிஷி முடிவுசெய்துகொண்டார். திருவண்ணாமலையின் அருட் தீபமாகிப் பிரகாசித்தார். முதலில் அருணாசலேசுவரர் ஆலயத்தில் தியானம் செய்தார்.அங்குள்ள பாதாள லிங்கத்தில் பல மாதங்களாக தியானத்தில் இருந்தார்.
மகான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் இவரை அடையாளம் கண்டு இதோ ஒரு பெரிய மகான் இருக்கிறார், பாருங்கள் என்று பொதுமக்களுக்கு ரமணரை அடையாளம் காட்டினார்.
பின்னர் விருபாக்ஷி குகை, கந்தாச்ரமம், பாலாக்கொத்து எனப் பல இடங்களில் வாசம் செய்து இறுதியில் அருணாசலேசுவரர் மலை அடிவாரத்தில் தனது தியானத்தை மேற்கொண்டார். அந்த இடமே தற்போது ரமணர் ஆசிரமமாக உள்ளது.
தேனிருக்கும் இடம் நோக்கி வண்டுகள் படையெடுக்கும் என்பதுபோல ரமணரை நோக்கி பக்தர்கள் வரத் தொடங்கினர். அவர்களுக்கு அருள்வழி காட்டியதோடு வாழும் முறையையும் உபதேசித்தார் ஸ்ரீ ரமணர். ‘எப்போதும் உண்மையே பேசுதல், கடினமான உழைப்பிற்கு பின்னே ஓய்வு. வெற்றி தோல்விகளைச் சமமாக பாவித்தல். பிறரை தாழ்வாக எண்ணாதிருப்பது, உணவையும் வீணாக்காமல் இருப்பது’ போன்ற நடைமுறை வாழ்வியலுக்கான உபதேசங்கள் அவரிடமிருந்து பிறந்தன.
திருவண்ணாமலையில் தங்கி, பல லட்சம்பக்தர்களின் வாழ்வில் ஆன்மிக விளக்கை ஏற்றிவைத்த ஸ்ரீ ரமண மகரிஷி, 1950-ம் ஆண்டு சித்திரை மாதம் இயற்கையோடு கலந்தார்.
ஆராதனை விழா
ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேய்பிறை திரயோதசி 11ம் நாளன்று ரமணரின் மகா ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்துள்ள ரமணாஸ்ரமத்தில் ரமணரின் 74ம் ஆண்டு மகா ஆராதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
அதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு ருத்ர ஜெயபமும், 4.45 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சியும், 5.30 மணிக்கு சிறப்பு தமிழ் பாராயணம் நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், சிறப்பு அலங்காரம், பாலபிஷேகம், தீபாரதனை ஆகியவை தொடர்ந்து நடைபெற்றது. அதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் சிறப்பு விருந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.
இளையராஜா இசையஞ்சலி
அதைத்தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை ஆராதனை நடைபெற்றது. அப்போது, மகான் ரமணரை போற்றும் பாமாலைகளை ஆர்மோனியம் வாசித்து இசையஞ்சலி செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் பாடல்களை ரசித்து ஆனந்தம் அடைந்தனர். மகா ஆராதனை வழிபாட்டில் ஆஸ்ரம நிர்வாகி வேங்கட் சு.ரமணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu