திருவண்ணாமலை: புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா

திருவண்ணாமலை: புதுமைப்பெண் திட்ட தொடக்க விழா
X

புதுமை பெண் திட்ட பயனாளிகளுக்கு வரவேற்பு தொகுப்பு பை மற்றும் வங்கி பற்று அட்டை அமைச்சர் எ.வ.வேலு  வழங்கினார்.

Tiruvannamalai Collector News Today -புதுமை பெண் திட்ட பயனாளிகளுக்கு வரவேற்பு தொகுப்பு பை மற்றும் வங்கி பற்று அட்டையை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.

Tiruvannamalai Collector News Today -திருவண்ணாமலை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் புதுமை பெண் திட்டம் என்று பெயரிடப்பட்ட மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதி திட்ட தொடக்க விழா திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் மீனாம்பிகை வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு புதுமை பெண் திட்ட பயனாளிகளுக்கு வரவேற்பு தொகுப்பு பை மற்றும் வங்கி பற்று அட்டை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

தமிழக முதல்- அமைச்சர் மக்களுக்காக காலம், நேரம் பார்க்காமல் பணியாற்றி வருகின்றார். ஒருகாலத்தில் பெண்கள் கல்வியை படிக்க முடியாத சூழல்நிலை இருந்தது. இந்த நிலையை மாறி இன்றைக்கு பெண்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர். பெண்கள் கல்வி அறிவு பெற்றே ஆக வேண்டும் என்று முயற்சி செய்த தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய 3 பேர் ஆவர். படித்த பெண்களின் எண்ணிக்கை இன்றைக்கும் வட மாநிலத்தில் குறைந்து தான் உள்ளது. ஆனால் தமிழகத்தில் படித்த பெண்களின் எண்ணிக்கை கூடியிருக்கின்றது.

இன்றைக்கு ஆண்களுக்கு, பெண்களுக்கு இடையே சமத்துவம் வந்து உள்ளது. மூவலூர் ராமாமிர்தம் பெண்களுக்காக போராடியவர். தேவதாசி முறையை ஒழிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சட்ட இயற்ற குரல் கொடுத்தவர் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். அதனால் தான் அவரது பெயர் இந்த திட்டத்திற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த திட்டத்தின் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் முதற்கட்டமாக 107 கல்லூரிகளை சேர்ந்த 4403 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் பற்று அட்டை வழங்கபட உள்ளது. நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 13 கல்லூரிகளை சேர்ந்த 783 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் பற்று அட்டை வழங்கப்பட்டது.

விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமரன், மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் அன்பழகன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத்தலைவர் பாரதிராமஜெயம், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story