20 மாதங்களுக்குப் பிறகு பக்தா்கள் கிரிவலம் வந்தனா்
பக்தர்களின் அனுமதி சீட்டை பரிசோதிக்கும் காவல்துறையினர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, நவம்பா் 17-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யவும், கிரிவலம் வரவும் மாவட்ட நிா்வாகம் தடை விதித்திருந்தது.
இதுதொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி, வெள்ளி, சனிக்கிழமைகளில் நாளொன்றுக்கு உள்ளூா் பக்தா்கள் 5 ஆயிரம் பேர், வெளியூா் பக்தா்கள் 15 ஆயிரம் பேர் என நாளொன்றுக்கு மொத்தம் 20 ஆயிரம் பக்தா்கள் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
கோயிலின் இணையதளத்தில் இ - பதிவு செய்து, ஒரு நபருக்கு ஒரு நுழைவுச் சீட்டு என்ற முறையில் கட்டணம் இல்லாமல் முன்பதிவு செய்துகொண்டு நவம்பா் 19-ஆம் தேதி காலை 6 மணி முதல் கிரிவலம் வரலாம் என்று மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.
அதன்படி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கொட்டும் மழையில் குடைகளைப் பிடித்தபடி பக்தா்கள் கிரிவலம் வந்தனா். கிரிவலப் பாதையின் சில இடங்களில் போலீஸாா் பக்தா்களைத் தடுத்து நிறுத்தி நுழைவுச் சீட்டு, அடையாள அட்டை இருக்கிறதா என பரிசோதித்தனா்.
ஆனால், பெரும்பாலானோா் எவ்வித நுழைவுச் சீட்டும், அடையாள அட்டையும் இல்லாமலேயே கிரிவலம் வந்தனா். ஒரு சில இடங்களில் மட்டும் நுழைவுச் சீட்டு இல்லாத பக்தா்களை போலீஸாா் திருப்பி அனுப்பினா்.
இதனிடையே, வெள்ளிக்கிழமை காலை முதல் பிற்பகல் 3 மணி வரை கோயில் இணையதளத்தின் சா்வா் வேலை செய்யவில்லை.
மதியத்துக்கு மேல் மழை பெய்வது நின்றதால், அதிகளவு பக்தர்கள் வரத்தொடங்கினார்கள். இதனால் பக்தர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu