தீண்டாமை ஒழிப்பில் முன்மாதிரியாக திகழும் திருவண்ணாமலை மாவட்டம்

மனிதநேய வாரத் தொடக்க விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் தீண்டாமை ஒழிப்பில் முன்மாதிரியாக திகழ்கிறது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார் என மனித நேய வார தொடக்க விழாவில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்ற கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மனித நேய வார துவக்கு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி விழாவினை தொடங்கி வைத்து பேசுகையில்,
தீண்டாமை ஒழிப்பில் முன்மாதிரி மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் விளங்குவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். இதற்காக மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விழா விழிப்புணர்வுக்கு பயன்படுத்த வேண்டும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கிராமத்துக்குள் சைக்கிளில் போகக்கூடாது, ஒரு குறிப்பிட்ட வகுப்பினர் தெருவில் நடந்து தான் போக வேண்டும் என இருந்த நிலை மாறி இன்றைக்கு அனைவரும் சமம் என்று மாற்றப்பட்டுள்ளது. தாட்கோ மூலம் அதிக அளவில் நமது மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது. சமத்துவ சுடுகாட்டில் சுற்றுச்சூழல் அமைக்க ரூபாய் பத்து லட்சம் அரசு வழங்குகிறது. ஆதிதிராவிடர் விடுதி காப்பாளர்கள் சரியாக பராமரிப்பதோடு அவர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும்.
விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ மாணவிகளின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் தவறுகளை கட்டுப்படுத்த வேண்டும் இவ்வாறு ஆட்சியர் முருகேஷ் கூறினார்.
விழாவில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சாந்தி, மாவட்ட பழங்குடியினர் நல அலுவலர் செந்தில்குமார் ,தாட்கோ மேலாளர் ஏழுமலை, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கணபதி, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக கண்காணிப்பாளர் தினகரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறை ஆசிரியர் காப்பாளர் மாரிமுத்து ,மாநில ஒருங்கிணைப்பாளர் தேவராஜ், மாநில இணை செயலாளர் ராமச்சந்திரன், போளூர் வட்ட தலைவர் தமிழ்வாணன், ஆசிரியர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் வாக்காளர் உறுதி மொழியினை அரசு அலுவலர்கள், விடுதி காப்பார்கள், அரசு துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் ஏற்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu