திருவண்ணாமலை: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலம்.
Ganesh Procession -திருவண்ணாமலை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கடந்த 31ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. மாவட்டத்தில் 1500-க்கும் மேற்பட்ட சிலைகள் இந்து முன்னணி, பல்வேறு அமைப்புகள் சார்பில் வைக்கப்பட்டிருந்தன.
திருவண்ணாமலை காந்தி சிலை அருகே நேற்று மாலை ஊர்வலம் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், நகர துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் ஆகியோர் தலைமையில் அங்கு ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். ட்ரோன் கேமராக்கள் மூலம் ஊர்வலம் கண்காணிக்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் இந்து முன்னணி சங்கத்தை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக காந்தி சிலை எதிரில் இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நகர தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய சிந்தனை கழக மாநில அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட பொதுச் செயலாளர் அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.
ஊர்வலம் அண்ணாமலையார் கோயிலில், கல்லக்கடை மூளை, தண்டராம்பட்டு சாலை, வழியாக தாமரை குளம் சென்றது. இந்த ஊர்வலம் செல்லும் போது இளைஞர்கள் பலர் ஆடி, பாடி ஆரவாரம் செய்தனர். மேளதாளம் முழங்க வாகனங்களில் விதவிதமான விநாயகர் சிலைகள் அணிவகுத்து சென்றது. தங்கள் வீடுகளில் வைத்து வணங்கப்பட்ட சிறிய அளவிலான சிலைகளை ஊர்வலத்தில் சென்ற வாகனத்தில் எடுத்து சென்று வைத்தனர். ஊர்வலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை, சமூத்தர காலணி, தர்க்கா உள்ளிட்ட பகுதிகளில் எந்தவித அசம்பாவித சம்பவங்களை தடுக்க காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருந்தன. அதன்படி தண்டராம்பட்டு சாலையில் உள்பட முக்கிய தெருக்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் தேவையில்லாமல் வெளியே செல்பவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஊர்வலத்தின் முன்னேயும், பின்னேயும் காவல்துறையினர் வாகனங்கள் சென்றது. ஒன்றன் பின் ஒன்றாக வந்த விநாயகரை தாமரை குளத்தில் கிரேன் மூலம் சிலைகள் கரைக்கப்பட்டது. இதையொட்டி நகரின் முக்கிய இடங்களிலும், ஊர்வல பாதைகளிலும் 600-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
போளூர்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போளூர் நகரில் 30 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைத்து வழிபாடு நடந்தது. 3-ம் நாளான இன்று எல்லா இடங்களில் இருந்து விநாயகர் சிலைகள் ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்றன. பெரிய ஏரி, கூர் ஏரி, மோட்லூர் ஏரி ஆகிய 3 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைப்பு நடந்தது. இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர். மேலும் போளூரை சுற்றியுள்ள சில கிராமங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
இதேபோன்று திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலையில் மலைவாழ் மக்கள் விநாயகர் சிலையை கரைக்க டிராக்டரில் ஊர்வலமாக எடுத்து சென்றனர். அப்போது அப்பகுதியில் ஜவ்வாது மலைவாழ் பெண்கள் விநாயகர் ஊர்வலத்தில் தங்கள் குல பாரம்பரியத்தின் படி நடனமாடினார். பின்னர் சிலையை எடுத்து சென்று கரைத்தனர்.
செய்யாறு
செய்யாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. வழிபாடு நடத்திய சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்காக பொதுமக்கள் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று செய்யாற்றில் கரைத்தனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu