திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தனி நபர் கோரிக்கைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் மணிலா அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மணிலாவை 6 மாத காலத்திற்குள் சாகுபடி செய்வதால் அதனை அதிகளவில் பிரித்தெடுக்கும் சிறிய அளவிலான அறுவடை எந்திரத்தை விவசாயிகள் எவ்வாறு பயன்படுத்துவது என்று வேளாண்மைத் துறை சார்பாக நடத்தப்படும் முகாம்களில் அதன் உபயோகம் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும்.
அதன்மூலம் விவசாயிகள் அதன் முக்கியத்துவத்தை தெரிந்து கொண்டு அந்த எந்திரத்தை பயன்படுத்த முன் வருவார்கள். மணிலா அறுவடை எந்திரம் வாங்குவதற்கு வேளாண்மை துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சொட்டு நீர் பாசனம் மண்வளத்தை பாதுகாத்து நீர்வள ஆதாரத்தை மேம்படுத்தி நிலத்திற்கு ஏற்ப பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பயிர்களை வைத்து விவசாயிகள் சாகுபடி செய்ய வேண்டும். நெற்பயிர் மற்றும் தானிய வகை பயிர்களை வைத்து ஒவ்வொரு கிராமமும் தன்னிறைவு அடைய வேண்டும். புதிய மின் இணைப்பு பெற்று உள்ள விவசாயிகள் மானியத்துடன் கூடிய மின் மோட்டார்களை பெற்று விவசாயிகள் நல்ல முறையில் சாகுபடி செய்ய வேண்டும். விவசாயிகள் கிசான் கடன் அட்டை மூலம் விவசாயத்திற்கான பயிர்கடன்களை பெற்று பயன்பெறலாம். கிசான் அட்டை இல்லாதவர்கள் அந்ததந்த வட்டாரத்தில் வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கெண்டு அட்டை பெற்று கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் பாலா, திருவண்ணாமலை கூட்டுறவு மண்டல இணை பதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜெயம், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம் உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu