திருவண்ணாமலை அண்ணாமலையார் தேர் செப்பனிடும் பணி துவக்கம்
தேர் செப்பனிடும் பணியினை தொடங்கி வைத்த அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம்
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா கார்த்திகை மாதங்களில் நடைபெறும். தொடர்ந்து கார்த்திகை மாதத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாவை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் திருவண்ணாமலையில் குவிந்து அண்ணாமலையாரை தரிசிப்பதுடன் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம் பாதையில் கிரிவலம் மேற்கொள்வர்.
கார்த்திகை மாதத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கப்படும் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் ஏழாம் நாள் விழாக்களின் முக்கிய விழா நாளாக கருதப்படும். ஏழாம் நாளன்று மாட வீதியில் விநாயகர், முருகர், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் என ஐந்து தேர்களும் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வரும்.
பராசக்தி அம்மன் தேர் முழுக்க முழுக்க பெண் பக்தர்கள் மட்டுமே மாடவீதி முழுவதும் வடம் பிடித்து இழுத்து வருவர் என்பது குறிப்பிடத்தக்கது
300 டன் எடையும் 62 அடி உயரமும் கொண்ட ஆசியாவிலேயே இரண்டாவது மிக பெரிய தேர் என்று அழைக்கக்கூடிய மகா ரதம் அண்ணாமலையார் தேர் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்டதால் ஆண்டுக்கு ஒரு முறை அதனை செப்பனிட்டு மாட வீதியில் வலம் வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் கார்த்திகை தீபத்திற்கு முன்னதாக பெரிய தேர் செப்பனிடும் பணியானது பொதுப்பணித் துறையினரால் தொடங்கியுள்ளது . 62 அடி உயரம் கொண்ட தேரின் உச்சியில் கலசம் வைக்கப்பட்டுள்ள முதல் மாடம் புதியதாக மாற்றி அமைப்பதுடன் 2 மற்றும் 4-வது மாடங்கள் முழுமையாக பழுதுபார்க்கப்பட உள்ளன. தொடர்ந்து சுவாமி அம்பாள் அமரக்கூடிய பீடம் பழுது பார்த்து சரி செய்வது உள்ளிட்ட தேரின் அனைத்து பகுதிகளும் முழுமையாக செப்பனிடப்படவும் உள்ளன என கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தேர் செப்பனிடும் பணி தொடக்க நிகழ்ச்சியில் அண்ணாமலையார் கோயில் சிவாச்சாரியார்கள் பூஜைகள் செய்து தேரின் செப்பனிடும் பணி துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம், மற்றும் அறங்காவலர்கள் ராஜாராம், கோமதி குணசேகரன், பெருமாள், கோயில் மேலாளர் செந்தில், கோயில் பணியாளர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu