திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசல்
தேரடி தெருவில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
திருவண்ணாமலை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதில் முக்கியமாக காலை முதல் இரவு வரை திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள மத்தளாங்குல தெரு, போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும். இந்த பகுதியின் வழியாக பஸ் நிலையத்தில் இருந்து சென்னை நோக்கி செல்லும் பஸ்களும், சென்னையில் இருந்து வரும் பஸ்களும் வந்து செல்கின்றன. மேலும் நகரின் முக்கிய பகுதியாக உள்ளதால் இந்த பகுதியின் வழியாகவே பெரும்பாலான வாகனங்கள் வந்து செல்கின்றன. மத்தளாங்குல தெருவில் சாலையோரங்களில் உள்ள கடைகள் முன்பு போதிய வாகன நிறுத்துமிடம் இல்லாததால் பெரும்பாலான வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது.
பெரியார் சிலை அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் இருவேளைகளிலும் பள்ளிக்கு செல்ல இந்த சாலையை தான் கடந்து செல்ல வேண்டும்.
இந்த நிலையில் நேற்று மாலை மத்தளாங்குல தெரு வழியாக பஸ் நிலையம் நோக்கி வந்த அரசு பஸ் திடீரென சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதனால் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி சேதமடைந்தது.
அதனால் பாதிக்கப்பட்ட இருசக்கர வாகன உரிமையாளர்கள் அரசு பஸ்சை நடுவழியிலேயே நிறுத்தி பஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 45 நிமிடங்களுக்கு மேல் சாலையிலேயே அரசு பஸ் நின்றதால் அதன் பின்னால் வந்த வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் அரசு பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தினர்.
அதேபோல் திருவண்ணாமலை நகரத்தின் முக்கிய கடைகள் அதிகம் நிறைந்த தேரடி தெரு, பெரிய தெரு, சின்ன கடை தெரு ஆகிய பகுதிகளில் கடைகளுக்கு வரும் பொதுமக்களும் பெரிய தெருவில் மருத்துவமனை வங்கிகளுக்கு வரும் பொதுமக்களும் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் சாலைகளிலேயே நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பேருந்துகள் அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
வங்கிகள், மருத்துவமனை உரிமையாளர்கள் பார்க்கிங் வசதிகளை செய்ய வேண்டும் என நகராட்சி நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதால் மாவட்ட நிர்வாகம் திருவண்ணாமலை நகரில் போதிய வாகன நிறுத்தும் இடம் ஏற்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குறிப்பாக விடுமுறை நாட்களில் அண்ணாமலையார் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.
அவர்கள் தாங்கள் வரும் வாகனத்தை மாட வீதிகளில் நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர்.
அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக தனி கார் பார்க்கிங் வசதி எதுவும் இல்லாததால் பக்தர்கள் சாலைகளிலேயே நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர், இதனால் மாட வீதிகளில் போக்குவரத்து மிகவும் பாதிப்படைகின்றது.
அண்ணாமலையார் கோயில் வரும் பக்தர்களுக்காக தனியாக கார் பார்க்கிங், இருசக்கர வாகன பார்க்கின் வசதி செய்து தர வேண்டும் என பக்தர்கள் கோயில் நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu