பள்ளிக் கல்வியை தொடர உதவிய ஆட்சியருக்கு நன்றி தெரிவித்த மாணவர்

தனது பள்ளி படிப்பு தொடர்வதற்கு உதவிய ஆட்சியருக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்ட மாணவர்
பள்ளிக்கல்வியை தொடர உதவிய திருவண்ணாமலை ஆட்சியருக்கு பிளஸ் 2 மாணவர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த எடப்பிரை கிராமத்தை சேர்ந்தவர் தருண் . கலசப்பாக்கம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த நிலையில், தேர்வு முடிந்து கடந்த ஏப்ரல் மாதம் கோடை விடுமுறையில் வீட்டில் இருந்த போது தென்னங்காய்களை பறிப்பதற்காக மரத்தில் ஏறி தவறி விழுந்து முதுகு தண்டு வட ம் கடுமையாக பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மாணவர் தருண் நடக்க முடியாத நிலையில் சக்கர நாற்காலி கொண்டு மட்டுமே பயணித்து வருகிறார்.
மேலும் தொடர்ந்து பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மாணவர் தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேலாக பள்ளிக்கு வராத நிலையில் பள்ளியிலிருந்து அவரை பள்ளி நிர்வாகம் நீக்கியது.
மகனின் உடல்நிலை பாதிக்கப்பட்டு உள்ள நிலையில் பள்ளி படிப்பும் தடை பெற்றுள்ள நிலையில் பெற்றோர்கள் செய்வதறியாது திகைத்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் பாண்டியன் அவர்களை அணுகி தங்கள் மகன் தொடர்ந்து 12ம் வகுப்பு படிப்பதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்.
மாணவருக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் ஊக்கம் அளித்து பேசிய ஆட்சியர், மாணவனின் தொடர் படிப்பிற்கு உதவுவதாக கூறி மாணவரை உடனடியாக பள்ளியில் சேர்க்க முதன்மை கல்வி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்த மாணவரை திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பில் சேர்த்து மாணவர் தொடர்ந்து படிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனக்கு தொடர்ந்து படிக்க வழிவதை செய்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை மாணவர் தருண் தனது தந்தையுடன் நேரில் சந்தித்து மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கள் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் மாணவனுக்கு வாழ்த்துக்களை கூறி பாராட்டுக்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu