திருவண்ணாமலையில் காணாமல் போன ஜப்பான் பக்தரை தேடும் பணிகள் தீவிரம்

காணாமல் போன ஜப்பான் நாட்டைச் சார்ந்த சடோஷி மினெட்டா
திருவண்ணாமலைக்கு வந்த ஜப்பான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணி மாயமாகி 3 மாதங்களாகியும் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையார் மலையில் போலீசார் தேடுதல் பணி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. மேலும் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி அமைந்து உள்ள கிரிவலப்பாதையில் பல்வேறு ஆசிரமங்கள், அஷ்ட லிங்க கோவில்கள் உள்ளன. இவற்றை காண வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்றனர். அவ்வாறு வெளி நாடுகளில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் ஆசிரமங்களில் தங்கி ஆன்மீக சிந்தனை கொண்டு தியானம் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் திருவண்ணாமலை மலை மீது அனுமதிக்கப்பட்ட பகுதியில் நாட்கள் கணக்கில் தியானம் மேற்கொள்வார்கள்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஆசிரமம் ஒன்றில் சுற்றுலா பயணியாக வந்த ஜப்பான் டோச்சீகி என்ற பகுதியை சேர்ந்த சடோஷி மினெட்டா , என்பவர் கடந்த மே மாதம் 3-ந் தேதி அறை எடுத்து தங்கினார். மே மாதம் 5-ந் தேதி அங்கு அவரது உடமைகளை வைத்து விட்டு வெளியேசென்றவர், பின்னர் அறைக்கு திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஆசிரமத்தின் நிர்வாகி திருவண்ணாமலை டவுன் போலீசில் புகார் செய்தனர். இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தினர். விசாரணையில் மாயமான ஜப்பான் நாட்டை சேர்ந்த சடோஷி மினெட்டா ஜப்பான் மொழியிலும், ஆங்கிலமொழியிலும் தன்னை யாரும் தேட வேண்டாம் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள தீபம் ஏற்றப்படும் அண்ணாமலையார் மலைக்கு செல்வதாக கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றதாக தெரிவிக்கின்றனர்.
இது குறித்து திருவண்ணாமலை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 3 மாதங்களாக மாயமான ஜப்பான் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணியை தேடி வருகின்றனர். அவர் வேறு ஏதேனும் சுற்றுலா தலங்களுக்கு சென்றுள்ளாரா? என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அந்த நபரை போலீசார் தேடி வந்தனர். அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்காத நிலையில் அவர் திருவண்ணாமலை மலை மீது சென்று தியானம் மேற்கொள்ளகிறாரா அல்லது மீண்டும் திரும்பி வர வழி தெரியாமல் மலையில் எங்கேனும் சிக்கியுள்ளாரா? என்ற கோணத்தில் போலீசார் தனிப்படை அமைத்து மலை ஏறும் நபர்களைக் கொண்டு தேடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu