விழாக்களில் மரக்கன்றுகளை நட முன்வருமாறு ஆட்சியர் வேண்டுகோள்!

விழாக்களில் மரக்கன்றுகளை நட முன்வருமாறு  ஆட்சியர் வேண்டுகோள்!
X

மரக்கன்றுகளை நட்ட மாவட்ட ஆட்சியர்.

பசுமை இயக்கம் மரக்கன்றுகள் நடும் விழாவில், பிறந்தநாள் பல்வேறு விழாக்களில் மரக்கன்றுகளை நட வேண்டும் என ஆட்சியர் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் பசுமை இயக்க மரக்கன்றுகள் நடும் விழாவில் பிறந்த நாள், பல்வேறு விழாக்களில் மரக்கன்றுகளை நட அனைவரும் முன்வர வேண்டும் எ ன் று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

திருவண்ணாமலை வனக்கோட்டத்தில் 2024- 25ம் ஆண்டில் தமிழ்நாடு பசுமை இயக்கம், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டம், ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா, தேசிய நெடுஞ்சாலை திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பசுமை போர்வையை அதிகரிக்கும் வகையில் 9 லட்சத்து 26 ஆயிரத்து 659 மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான தொடக்கமாகக் மரக்கன்றுகள் நடும் விழா திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு மாநில தடகள சங்க துணை தலைவர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்.பி., திருவண்ணாமலை ஒன்றியக்குழுத் தலைவர் கலைவாணி கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் கார்க் வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில்,

ஐவகை நிலங்களில் இருந்து தான் மனித வாழ்க்கை முறை தொடங்கியது. நிலவகைகளுக்கு ஏற்றவாறு மரங்கள் நடப்பட்டு அது வளர்கின்ற கருத்தானது உலகிலேயே முதன்முதலாக தமிழர்கள் தான் கடைபிடித்தார்கள். அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிற்கும் உகந்த நாட்டு மரங்களை தான் நட வேண்டும். நம் நாட்டு மரங்களை வளர்க்கின்ற பொழுது தான் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு ஏற்ற பழங்களும், காய்கறிகளும் கிடைக்கும். நம் முன்னோர்கள் அனைவரும் காடுகளில் பிறந்து வளர்ந்தவர்கள்.

அத்தகைய காடுகளில் மரங்களை அழிக்கின்ற பொழுது அதற்கு ஈடாக எத்தனை மரங்களை நடுகின்றோம், இருக்கின்ற இடங்களில் மரங்கள் நட்டு வைக்காமல் ஏன் விட்டு வைத்திருக்கின்றோம் என்று நினைக்கின்ற பொழுது நாம் எந்த அளவிற்கு இயற்கையை விட்டு வந்திருக்கிறோம் என்பது சரியாக புரியும். எனவே நாம் மரங்களை அதிகமாக நட வேண்டும். இயற்கையை பாதுகாப்பதற்கு மரங்கள் நடுவது என்பது மிக அவசியம். மனிதர்களாகிய நாம் மரங்களை நடுவதை விட பறவைகளும், விலங்குகளும் நட்டு கொண்டு செல்கின்றன. இயற்கையோடு இணைந்து வாழ்கின்ற பொழுது தான் நம் வாழ்வு அழகாக சிறப்புறும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தற்போது 1000 மரக்கன்றுகள் நட்டு இருக்கின்றோம். நமது பங்களிப்பை அளிக்கின்ற வகையில் பிறந்த நாள் மற்றும் பல்வேறு விழாக்களில் மரக்கன்றுகளை நட நாம் அனைவரும் முன்வர வேண்டும். குறிப்பாக பழ மரங்களை வீட்டிற்கு வெளிப்பகுதியில் நட வேண்டும். அவ்வாறு நடுகின்ற பொழுது மனிதர்களுக்கு மட்டுமல்லாது பறவைகள், விலங்குகள் போன்றவைக்கும் பயனுள்ளவையாக அமையும். என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

விழாவில் துறை சார்ந்த வன அலுவலர்கள், அலுவலர்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் என பலா் கலந்து கொண்டனர்.

Next Story
ராசிபுரம் பகுதியில் அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம்!