மக்களுடன் முதல்வர் முகாமினை ஆய்வு செய்த ஆட்சியர்

முகாமினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.
திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் மக்களுடன் முதல்வர் திட்டம் 3 வது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை செட்டி தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை நகராட்சியில் நடைபெறும் மக்களிடம் முதல்வர் முகாமில் நேற்று எந்தெந்த வார்டுகளுக்கு முகாம்கள் நடைபெறுகிறதோ அந்த வார்டு பொதுமக்கள் மனு வழங்கலாம், வார்டு எண் 1, 2,3, 4, 8 ஆகிய ஐந்து வார்டு பொதுமக்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மனு வழங்கலாம் மற்ற வார்டு பொதுமக்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியில் மனுக்களை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் மக்களுடன் முதல்வர் முகாமில் இ சேவையில் பட்டா மாற்றம், குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு , பெயர் மாற்றம் போன்ற சேவைகளுக்கு ரூபாய் 30 செலுத்தி பொதுமக்கள் பயன்பெறலாம்.
முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து, மக்களிடம் பெறப்பட்ட மனுக்களில் உடனடியாக தீர்வு காணப்படுகிறதா என நேரடியாக கண்காணித்து கொண்டிருக்கின்றனர்.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை அரசு அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
நேற்று நடைபெற்ற முகாமில் பட்டா மாறுதல் கேட்டு மனு அளித்த இரண்டு நபர்களின் மனு மீது உடனடி தீர்வு காணப்பட்டு பட்டா மாற்றத்திற்கான ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் அதிக அளவில் வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், நகரப் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் நலிந்த மக்களுக்கு வீட்டு ஒதுக்கீடு செய்ய கூறியும் அதிக அளவில் மனுக்கள் வந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆய்வின் போது, மாநில தடகள சங்கத்தின் துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், நகர மன்ற தலைவர் நிர்மலா வேல் மாறன் , தமிழ்நாடு அரசு உடல் உழைப்புத் தொழிலாளா் மற்றும் சமூகப் பாதுகாப்பு வாரிய உறுப்பினா் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல் மாறன், வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி, வட்டாட்சியா் தியாகராஜன், பறக்கும் படை தாசில்தார் சுரேஷ், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பரிமளா, வட்ட வழங்கல் அலுவலர் துரைராஜ் ,வருவாய் ஆய்வாளர் சுதா, கிராம நிர்வாக அலுவலர்கள், அனைத்து துறை அரசு அலுவலர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu