'இந்தியாவின் விளையாட்டு தலைமை இடமாக, தமிழகத்தை மாற்றுவதே முதல்வரின் கனவு' - அமைச்சர் பெருமிதம்

மாநில இளையோர் தடகளப் போட்டியை, அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்.
Sports Capital - திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி, மாவட்ட தடகள சங்கம் இணைந்து 36 வது மாநில இளையோர் தடகள போட்டிகள் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது.
நேற்று நடந்த துவக்க விழா நிகழ்ச்சியில், மாவட்ட தடகள சங்க தலைவரும் மாநில தடகள சங்கத் துணைத் தலைவருமான கம்பன் தலைமை வகித்தார் . மாவட்ட தடகள சங்க இணை செயலாளர் லதா , சுகாதாரத்துறை இணை இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ் ஆகியோர் சிறப்புரையாற்றினர் . டி ஆர் ஓ பிரியதர்ஷினி, மாவட்ட விளையாட்டு அலுவலர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டு ஜோதியினை ஏற்றி, வீரர்களிடம் அளித்தார்.
முன்னதாக வீரர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து, அவர் பேசியதாவது:
சமீபத்தில், குஜராத்தில் நடைபெற்ற 36 வது தேசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழக முதல்வர் உத்தரவின் பேரில் தமிழகத்திலிருந்து 370 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர் . இதுவரை இல்லாத அளவிற்கு, வீரர்கள் வெற்றிகரமாக பங்கேற்று 25 தங்கப் பதக்கங்கள் 32 வெள்ளிப் பதக்கங்கள் 25 வெண்கல பதக்கங்கள் என 80 பதக்கங்களை பெற்று, இந்தியாவிலேயே ஐந்தாவது இடத்தைப் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்து, மரியாதை செய்துள்ளனர்.
விளையாட்டு என்பது, பதக்கங்களை பெறுவதற்கு மட்டுமல்ல, உடல் உறுதியை பெறுவதற்கும். அந்த வகையில் அத்தனை பேரும் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இன்றைக்கு நாடெங்கிலும், வீதிகள் தோறும் மருத்துவமனையில் இருக்கிறது. ஆனால் கடந்த காலத்தில் மருத்துவமனைகள் எங்கும் இல்லை ஆனால் விளையாட்டு மைதானங்கள் இருந்தது. இன்றைக்கு விளையாட்டுகள் குறைந்த காரணத்தால், மருத்துவமனைகள் அதிகமாகி விட்டது.
நமது உடலைக் காக்க, விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை பெற்றதால் தான், தமிழக முதல்வர் இந்த 15 மாத காலத்தில், விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை நிறைவேற்றியுள்ளார். சர்வதேச மற்றும் தேசிய அளவில் வெற்றி பெற்ற 1380 பேருக்கு, 36 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார்.
இது எந்த மாநிலத்திலும் இதுபோன்று செய்யவில்லை தமிழகத்தில் மட்டும்தான் முதல்வர் ஸ்டாலின், விளையாட்டுத் துறைக்கு முக்கியத்துவம் அளித்து ஊக்கப்படுத்தி வருகிறார். இந்திய பிரதமரும் தமிழக முதல்வரும் கலந்து கொண்ட 44 வது உலக அளவிலான செஸ் போட்டியில் கலாச்சாரம், தமிழக பண்பாடு போன்றவற்றை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த பெருமை நமக்க உண்டு.
தற்போது நடைபெறும் போட்டியில் வெற்றி பெறுகிற மாணவர்கள், நவம்பர் 11ம் தேதி அசாம் மாநிலம் கவுகாதியில் நடைபெற உள்ள 37-வது தேசிய விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர். 'இந்தியாவின் விளையாட்டு தலைமையிடம் தமிழகம்' என்று மாறவேண்டும் என்பதே முதல்வரின் கனவு. அந்த கனவை நோக்கி நாம் அனைவரும் பயணிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.
இந்த போட்டிகள், வருகிற 19-ம்தேதி வரை நடைபெற உள்ளது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்படுகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu