கள்ளச்சாராய விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம்

கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ள சாராயம் குடித்து 15 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் இந்த சம்பவத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்திரவிடப்பட்டுள்ளது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சாராய வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது மேலும் கலால் வருவாய் துறையினரும் போலி மது விற்பனை செய்வதை தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக கள்ளச்சாராயம், போலி மதுவிற்பனை தடை செய்தல் தொடர்பான ஆய்வு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் வருவாய் கிராமம் வாரியாக கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்களுக்கு தேவையான பொருட்களை தந்து உதவும் நபர்கள் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டது.
சாராயம் விற்பது மற்றும் காய்ச்சுவது போதை பொருட்கள் பதுக்கல் தொடர்பான நடவடிக்கைகள், போலியான மதுபானங்கள் விற்பனை மற்றும் ஆயத்தீர்வை துறை கீழ் உரிமம் வழங்கப்பட்ட பல்வேறு அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் ஆகிய நேர்வுகளில் சட்டத்துக்கு புறம்பான விதி மீறல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கள்ளச்சாராயம் மற்றும் மதுபானம் விற்று தற்போது மனம் திருந்தி வாழ்பவர்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்கள் வசிக்கும் பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை ஒருங்கிணைந்து சிறப்பு முகாம் நடத்தி அவர்களுக்கு சுயதொழில் தொடங்க நிதி உதவியும், இலவசமாக ஆடு, மாடு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
காவல்துறை அடிக்கடி சோதனையில் ஈடுபட வேண்டும். சாராயம் காய்ச்சும் நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தொழிலில் ஈடுபடும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு மையம் ஏற்படுத்தப்பட உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, செய்யாறு உதவி கலெக்டர் அனாமிகா, உதவி கலெக்டர் (பயிற்சி) ராஷ்மி ராணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், சுகாதார பணிகள் துணை இயக்குனர் செல்வக்குமார், அலுவலக மேலாளர் (குற்றவியல்) பாலமுருகன், காவல்துறை அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu