உயர்கல்வியில் சேரும் மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: மாவட்ட ஆட்சியர்
ஆட்சியர் முருகேஷ்.
Apply For Scholarships Online -அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று உயர் கல்வி சேரும் அனைத்து மாணவிகளுக்கும், சான்றிதழ் படிப்பு, பட்டயப்படிப்பு, பட்டப்படிப்பு, தொழிற்கல்வி ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி கல்வி பயின்று முடிக்கும் வரை மாதம் ரூ.1000 அவர்களின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம்.
மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர் கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும். தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். 2022-2023-ம் கல்வியாண்டில் மாணவிகள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர் இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் இதர முதலாம் ஆண்டிலிருந்து 2-ம் ஆண்டு செல்லும் மாணவிகளும், 2-ம் ஆண்டில் இருந்து 3-ம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவிகளும், தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் 3-ம் ஆண்டில் இருந்து 4-ம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் 4-ம் ஆண்டிலிருந்து 5-ம் ஆண்டு செல்லும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.
இத்திட்டத்தின் கீழ் இளநிலைப் படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும். முதுநிலை படிப்பு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்கு தேவையான தெளிவுரைகள், கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 என்பதில் தொடர்பு கொண்டு விவரங்களை பெற்று கொள்ளலாம். இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவிகளும் இத்திட்டத்திற்கான புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in என்பதன் வழியாக தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu