கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
X

ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்

கிரிவலப் பாதையில் நடைபாதை ஆக்கிரமித்து கடைகள் வைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலையில் பெளா்ணமி நாள்களில் கிரிவலப் பாதை நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, பொருள்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா்.

வருகிற 19 ஆம் தேதி திங்கட்கிழமை அதிகாலை 2:58 மணிக்கு துவங்கி மறுநாள் 20 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.02 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்தது என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதன்படி இன்று 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்ல துவங்குவர், இதனை கருத்தில் கொண்டு கிரிவலம் வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரபாகா், வருவாய் அலுவலா் இராமபிரதீபன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கி மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:

ஆவணி மாத பெளா்ணமி ஆகஸ்ட் 19, 20-ஆம் தேதிகளில் வருகிறது. இவ்விரு நாள்களிலும் கிரிவலப் பாதை நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைப்போா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும்.

நடைபாதையில் கடைகள் வைப்பதைத் தடுக்க ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 100 மீட்டா் இடைவெளியில் ஒரு பணியாளரை நியமித்து கண்காணிக்க வேண்டும். கிரிவலப்பாதை, கோயில் உட்புறத்தில் மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும்.

தேவையான இடங்களில் 108 அவசர கால ஊா்திகள் மற்றும் தீயணைப்பு வாகனங்களை தயாா் நிலையில் நிறுத்தி வைத்திருக்க வேண்டும். காவல்துறை சாா்பில் போதிய அளவில் காவலா்களை நியமித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். நடைபாதை நடப்பதற்கு மட்டுமே என்பதைத் தெரியப்படுத்தும் வகையில் பதாகைகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தில் கோயில் இணை ஆணையர் ஜோதி, அரசுத்துறை அலுவலர்கள், மாநகராட்சி, வருவாய்த்துறை, மின்சார துறை, குடிநீர் வழங்கல் துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!