திருவண்ணாமலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

திருவண்ணாமலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை
X

இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்து தெரிவித்த துணை சபாநாயகர் பிச்சாண்டி மற்றும் கம்பன்.

திருவண்ணாமலையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. முன்னதாக அவர்கள் இப்பண்டிகையை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பு கடைபிடித்து வந்தனர். நோன்பு நாட்கள் முடிந்த நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது.

இதைமுன்னிட்டு முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர். திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை செல்லும் சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும், அவலூர் பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்திலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தொழுகை செய்தனர். அப்போது ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறுவர்களும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

பின்னர் அவர்கள் உற்றார் உறவினர்களுக்கு இனிப்பு மற்றும் அசைவ உணவு வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

துணை சபாநாயகர் வாழ்த்து

ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு சிறப்பு தொழுகை முடித்து வந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி, மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே. கம்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்தி வேல்மாறன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஆறுமுகம், வழக்கறிஞர் அருள் குமரன், உள்ளிட்ட திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் முக்கிய மைதானங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ரோந்து பணியிலிலும் போலீசார் ஈடுபட்டனர்.

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் புறவழி சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் மஸ்ஜிதே தையீப் பள்ளிவாசல் படேல் அத்தாவுல்லா, முத்தவல்லி மதார்ஷா, பொருளாளர் சலீம் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் முஸ்லிம்கள் கலந்து கொண்ட சிறப்பு தொழுகை நடந்தது.

தொழுகை முடிந்ததும் பெரியவர்கள் முதல் இளைஞர்கள், சிறுவர்கள் வரை ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

Tags

Next Story