போலி சாப்ட்வேர் மூலம் ரயில்வே டிக்கெட் விற்பனை :முக்கிய குற்றவாளி கைது

போலி  சாப்ட்வேர் மூலம் ரயில்வே டிக்கெட் விற்பனை :முக்கிய குற்றவாளி கைது
X

ரயில்வே பாதுகாப்பு படை முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன், திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் அருண்குமார் மற்றும் சிறப்பு குழுவினர் உள்ளனர்.

போலி மென்பொருள் மூலம் ரயில்வே டிக்கெட் விற்றவரை மும்பையில்திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் கைது செய்தனர்.

ரயில்வே தட்கல் டிக்கெட் பதிவு செய்ய போலி மென்பொருள் தயாரித்து 11 ஆண்டுகளாக விற்பனை செய்த உத்தரப் பிரதேச இளைஞரை, திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

வேலூர் பகுதியில் சட்ட விரோதமாக ரயில்வே தட்கல் டிக்கெட் விற்பனை செய்ததாக 5 தனியார் முன் பதிவு மையங்கள் மீது திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கடந்த 21-07-22-ம் தேதி ஐந்து வழக்குகளை பதிவு செய்தனர். இந்த வழக்கில், போலி மென்பொருள் விநியோகிஸ்தரான பிஹார் மாநிலம் தனபூர் பகுதியில் வசிக்கும் சைலேஷ் யாதவ்(27), கடந்த 19-09-22-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், உத்தரப் பிரதேச மாநிலம், கோண்டா அடுத்த கோல்ஹுயிகரிப் பகுதியைச் சேர்ந்த ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமது(40) என்பவரிடம் இருந்து சைலேஷ் யாதவ் போலி மென்பொருள் வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்தான், போலி மென்பொருளை தயாரித்து விற்பனை செய்வதில் மூளையாக செயல்பட்டுள்ளார்.

இதையடுத்து, திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப் படை முதுநிலை ஆணையர் ராமகிருஷ்ணன் மேற்பார்வையில், திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் அருண்குமார் (கூடுதல் பொறுப்பு) தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஆதித்ய குப்தா, ஹரிகிருஷ்ணன் (திருச்சி சைபர் பிரிவு) ஆகியோர் அடங்கிய சிறப்பு குழுவினர் ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமதுவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் நாடு முழுவதும் 3,485 பேரிடம் கூடுதலாக ரூ.2000-ரூ.3500-க்கு டிக்கெட்டை விற்றதும் கண்டறியப்பட்டது. இதன் மூலம் பல லட்ச ரூபாய் வருவாய் ஈட்டியதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து தனிப்படை போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

சிறப்பு குழுவினர் ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமதுவை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர் பற்றிய முழுமையான தகவல் ஏதும் இல்லாத நிலையில், இணையதள பயன்பாடு வழியாக, மும்பையில் டிட்டவாலா பகுதியில் தங்கியிருந்த, அவரது இருப்பிடத்தை மிக நுட்பமாக கண்டறிந்தனர். அங்கிருந்துதான், போலி மென்பொருளை தயாரித்து அவர் விற்பனை செய்து வந்துள்ளார். அனைத்து பணிகளும் போலியான பெயர்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. டிட்டிவாலா பகுதிக்கு மாறு வேடத்தில் சென்ற சிறப்பு குழுவினர், ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமதுவை சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு லேப் டாப், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் அருண்குமார் கூறும்போது,

'tatkalsoftwareall.in என்ற இணையதளம் உருவாக்கி, ஷார்ப், நேக்சஸ் பிளஸ் பிளஸ், பியூஷன், டெஸ் ஆகிய மென்பொருட்களை சட்டவிரோதமாக தயாரித்து, ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரபூர்வ இணையத்தில் ஊடுருவி தட்கல், பிரிமீயம் தட்கல் மற்றும் முன் பதிவு டிக்கெட் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

போலி மென்பொருள் தயாரித்து விற்பனை செய்யும் பணியை ஷம்ஷேர் ஆலம் கடந்த 2012-ம் ஆண்டு முதல் செய்து வந்துள்ளார். இவர் மீது குர்லா, தாதர், ஜோத்பூரில் தலா ஒரு வழக்குகள் உள்ளன. எவ்வித தகலும் இல்லாத நிலையில் மிகுந்த சிரமத்துக்கு இடையே ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமதுவை கைது செய்துள்ளோம். இந்த தொழிலுக்காக ஒரு வெளிநாட்டு செல்போன் எண், போலி முகவரியில் 4 இந்திய செல்போன் எண்கள் மற்றும் 3 வங்கிக் கணக்குகள், 5 மின்னஞ்சல் முகவரிகளை அவர் பயன்படுத்தப்படுத்தி உள்ளார்.

இவர் தயாரித்துள்ள அனைத்து போலி மென்பொருட்களும் அழிக்கப்படும். இதன்மூலம் ஐஆர்சிடிசி-க்கு நஷ்டம் இல்லை என்றாலும், ரயில் டிக்கெட் முன்பதிவை செய்ய முடியாமல் சாதாரண மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவரிடம் தொழில் ரீதியாக தொடர்பில் உள்ளவர்கள் மற்றும் போலி மென்பொருள் விற்பனை விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். ஷம்ஷேர் ஆலம் நிசார் அகமது போல், நாட்டில் பலர் உள்ளனர். இந்த வழக்கில் மேலும் சிலரை தேடி வருகிறோம் என்றார்.

பின்னர் அவரை, திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

Tags

Next Story