கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா வாகனங்கள் சீரமைப்பு

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சுவாமிகள் திருவீதி உலா வரும் வாகனங்களுக்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள்.
நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத் திருவிழா இந்தமாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது.
அண்ணாமலையார் சந்நிதியில், 64 அடி உயர கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. நிறைவு நாளான வரும் டிசம்பர் 6ம் தேதி அதிகாலை திருக்கோயிலின் கருவறையின் முன்பு சரியாக 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரம் கொண்டதாகும்.
தீபத்திருவிழா பூர்வாங்க பணிகள் செய்ய, கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு காலமாக கொரோனோ பரவல் காரணமாக மாடவீதியில் சுவாமி திருவீதிஉலா நடைபெறாமல் 5ம் பிராகாரத்தில் நடைபெற்றதால், பல்வேறு சுவாமி திருவீதி உலா வாகனங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்தது.
நிகழாண்டில், கொரோனா தொற்று பரவல் நீங்கி, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மாடவீதியில் சுவாமி திருவீதியுலா நடைபெற உள்ளது. சுவாமி திருவீதி உலாவில் பயன்படுத்தக்கூடிய வாகனங்களை பழுது பார்க்கும் பணியில் கோயில் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சுவாமி மற்றும் அம்பாள் திருவிழா நடைபெறும் 10 நாள்களும் காலை மாலை என இரு வேலைகளிலும் இந்திர விமானம், குதிரை வாகனம், சிம்ம வாகனம், புருஷா மிருகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர். அதன்படி தீபத் திருவிழா உற்சவமான நவம்பர் 27ம் தேதி காலை முதல் டிசம்பர் 6ம் தேதி இரவு வரை சுவாமி மற்றும் அம்பாள் வீதியுலா வரும் வாகனங்கள் அனைத்தும் 1000 கால் மண்டபம் அருகே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்திர விமானம், பூத வாகனம், குதிரை வாகனம், காமதேனு வாகனம், ரிஷப வாகனம் , பத்து தலை ராவணன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் முழுமையாக சீரமைக்கப்பட்டு பல்வேறு வண்ணங்கள் தீட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் 7ம் நாள் திருவிழா அன்று மாடவீதியில் வலம் வரும் பஞ்சமூர்த்திகள் தேர்களில் பொருத்தப்படும் குதிரைகளுக்கும் வண்ணம் தீட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. கோயிலில் உள்ள சந்நிதி கோபுரங்களுக்கு மின்விளக்குகள் அலங்கரிக்கும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது இந்தப் பணிகள் விரைவில் முடிக்கப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu