திரவ யூரியா பயன்படுத்த வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்

திரவ யூரியா பயன்படுத்த வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள்
X

பைல் படம்.

திரவ யூரியா பயன்படுத்த திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 1,299 டன் யூரியா, 784 டன் டி.ஏ.பி., 772 டன் பொட்டாஷ், 4,540 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 284 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரை இம்மாவட்டத்திற்கு தேவையான 85 ஆயிரத்து 343 டன் உரங்கள் வரபெற்று உள்ளது. இதில் 47 ஆயிரத்து 220 டன் யூரியா ஆகும். மார்ச் மாதத்திற்கான ஒதுக்கீட்டில் 1,689 டன் யூரியா வரப்பெற்று உள்ளது.

மண்வளம் காக்கும் வகையில் யூரியா பயன்பாட்டை குறைக்கும் வகையில் இப்கோ நிறுவன தயாரிப்பான நானோ திரவ யூரியா 500 மில்லி லிட்டர் பாட்டில் அனைத்து சில்லரை விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

500 மில்லி லிட்டர் நானோ திரவ யூரியா ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பயனை அளிக்கக்கூடியது. விலையும் குருணை யூரியாவை விட குறைவானது. அனைத்து வகையான பயிர்களுக்கும் யூரியா மேலுரத்திற்கு பதிலாக நானோ திரவ யூரியாவை பயன்படுத்தலாம்.

நானோ திரவ யூரியாவானது இலை வழியே ஊடுருவி இலை முதல் வேர் வரை சென்று தழைச்சத்தினை அளிக்கும்.மேலும் மண் மற்றும் நீர் மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கும். விவசாயிகள் தங்களது பயிர் சாகுபடி பரப்பிற்கேற்றவாறு தேவையான நானோ திரவ யூரியா பெற்று பயன்பெறலாம்.

மேலும் உரச் செலவினை குறைக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் திரவ உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம், பயறு, எண்ணெய்வித்துக்கள் மற்றும் நுண்ணூட்டக்கலவை போதிய இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.

விவசாயிகள் 50 சதவீத மானிய விலையில் திரவ உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட கலவைகளை தங்கள் பயிர் சாகுபடிக்கு தகுந்தவாறு பெற்று பயன்பெறலாம்.

இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் முருகன் தெரிவித்து உள்ளார்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!