திருவண்ணாமலையில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
திருவண்ணாமலையில் ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்ய ரூ.60 லஞ்சம் வாங்கும் அதிகாரிகளைக் கண்டித்து, நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து ஒரு மூட்டை நெல் கொள்முதல் செய்ய ரூ.60 லஞ்சமாக வசூலிக்கப்படுகிறதாம். குறிப்பாக, திருவண்ணாமலையை அடுத்த கேட்டவாரம்பாளையம் பகுதியில் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சப் பணத்தை கட்டாயப்படுத்தி வாங்குகின்றனராம். இதைக் கண்டித்து அண்மையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் கேட்டவரம்பாளையம் கிராமத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆனாலும், லஞ்சம் வாங்குவதை அதிகாரிகள் நிறுத்தவில்லை. எனவே, திங்கட்கிழமை தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிா்வாகிகள் வெங்கடேசன், .பலராமன், சாமிக்கண்ணு, மாா்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் உள்பட விவசாயிகள் திருவண்ணாமலை-வேலூா் சாலையில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் கூறியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமாா் 40 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. ஒரு மையத்தில் நாள் ஒன்றுக்கு சுமாா் 7 ஆயிரம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒரு மூட்டைக்கு ரூ.60 என்றால்கூட நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக வசூலிக்கப்படுகிறது. இந்தப் பணம் உயா் அதிகாரிகள் வரை செல்கிறது. இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மண்டல மேலாளா் தேன்மொழி கூறுகையில், 2023 ஜனவரி 2-ஆம் தேதி தொடங்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து இதுவரை எந்தப் புகாரும் வரவில்லை. புகாா் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu