திருவண்ணாமலை மலை மீது பறந்த ட்ரோன்: ரஷ்ய இளைஞரிடம் காவல்துறை விசாரணை
ட்ரோன் கேமரா பறக்கவிட்ட ரஷ்ய வாலிபர் மற்றும் வனத்துறையினர்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலையில் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏறி செல்ல வனத்துறையினரால் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மகா தீபத்தின் போது மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பகுதியில் அதற்கான தகவல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தீபமலை உச்சிக்கு நேற்று வெளி நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் உள்பட 3 பேர் சென்றிருப்பது குறித்து தெரியவந்தது. இதையடுத்து திருவண்ணாமலை வனத்துறையினர் மலை உச்சிக்கு விரைந்து சென்றனர். அப்போது, அதி நவீன கேமரா பொருத்தப்பட்ட டிரோன் பறக்கவிட்டு, மலை உச்சியில் 3 பேர் வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர்.
விசாரணையில், 3 பேரும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள், டிரோன் பறக்கவிட்டவர் ரஷ்யாவைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சர்ஜி(27) என்பதும், மற்ற இருவரும் அவருடன் வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
திருவண்ணாமலை தீபம் குறித்து இணையத்தில் பார்த்து வியந்ததாகவும், அதனால் நேரில் வீடியோவாக எடுத்து நண்பர்களுக்கு அனுப்ப திட்டமிட்டதாகவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவரிடம் இருந்து டிரோன் கேமரா, செல்போன், 360 டிகிரி படம் பிடிக்கக்கூடிய ஓஷ்மோ கேமரா மற்றும் படம் பிடிக்க வைத்திருந்த பல்வேறு எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும், அவருடன் வந்த பெண் உட்பட இரண்டு பேரை எச்சரித்து அனுப்பியதாகவும் வனச்சகரகர் சீனுவாசன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu