திருவண்ணாமலை காவல்துறையின் குறைதீர்வு முகாமில் குவிந்த மனுக்கள்
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட வடக்கு மண்டல ஐஜி.
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் வடக்கு மண்டல ஐஜி தலைமையில் குறை தீர்வு முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை வேங்கிக்கால் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் தமிழக சட்ட ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் சங்கர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் கண்ணன், துணைத் தலைவர் முத்துசாமி உள்ளிட்ட காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இந்த குறை தீர்வு முகாம் கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
இம்முகாமில் சுமார் 850 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. இதில் ஏடிஎஸ்பிக்கள் இன்ஸ்பெக்டர்கள் டிஎஸ்பிக்கள் விசாரணை நடத்தினர் பெறப்பட்ட மனுக்களில் 533 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி முடிவு எடுக்கப்பட்டது.
முன்னதாக இம் முகாமை துவக்கி வைத்து பேசிய வடக்கு மண்டல ஐஜி சங்கர் கூறியதாவது
தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி, அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு வாரமும் எஸ்பிக்கள், கமிஷனர்கள் பொதுமக்களை நேரடியாக சந்தித்து புகார்களை பெறுகின்றனர். மேலும், ஏற்கனவே அளித்த புகார்களின் மீதான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கிறோம். அதேபோல், புகார் மனுக்கள் மீதான நடவடிக்கைகளில் திருப்தியில்லாதவர்களின் மனுக்கள் மீது, உயர் அதிகாரிகள் மறு விசாரணை செய்து நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருவண்ணாமலையில் நடைபெறும் இந்த முகாமில் 420 பேர் புதியதாக மனு அளித்துள்ளனர். மேலும், ஏற்கனவே புகார் அளித்த 150 பேர் மறு விசாரணைக்கு அழைக்கப்பட்டு, அவர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையில் விசாரணை நடத்தப்படுகிறது.
காவல் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களிடம் கனிவாக பேசி, அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக வரவேற்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுபோன்ற முகாம்களில், பணம் கொடுக்கல், வாங்கல் போன்ற கடன் பிரச்னைகள், சொத்து பிரச்னைகள் போன்றவையே அதிகம் வருகின்றன. அதற்கு, சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காண்கிறோம். காவல்துறையால் எல்லா புகார்களுக்கும் தீர்வு காண முடியாது. நியாயமான தீர்வுக்காக முடிந்தவரை முயற்சி எடுக்கிறோம். காவல்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்ட தீர்வுகளை அளிக்கிறோம். எங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டு உத்தரவிட முடியாத, சமரசத்துக்கு இடமில்லாத வழக்குகள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்கள் நடத்துவதன் மூலம், வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முகாமில், திருவண்ணாமலை மாவட்ட ஏடிஎஸ்பிக்கள் பழனி, ஸ்டீபன், டிஎஸ்பிக்கள் குணசேகரன், அண்ணாதுரை, ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் போலீஸ் நிலையங்களில் மனுக்களின் தன்மையை அறிய தனி மென்பொருள் துவக்கி வைத்தார்.
Petition Enquiry and Tracking system என்ற இந்த புதிய மென்பொருளை போலீஸ் நிலையங்களில் புதியதாக நியமிக்கப்பட்ட வரவேற்பாளர்கள் பயன்படுத்துவார்கள் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu