சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் மனு

சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய கோரி கலெக்டரிடம் மனு
X

சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலை அருகே சுங்கச்சாவடியில் உபயோகிப்பாளர் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்யக்கோரி கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்கிற பாதையில் இனாம் காரியந்தல் அருகே ஒரு டோல்கேட் அமைக்கும் பணி 2017 ஆம் ஆண்டு துவங்கியது.

வெறும் 7 மீட்டர் அகலமாக இருந்த பாதையை இரண்டு பக்கமும் மணல் அடித்து அதை 10 மீட்டர் பாதையாக மாற்றி அங்கே டோல்கேட் அமைக்கும் பணி நடைபெற தொடங்கியது.தற்போது அந்தப் பணிகள் முடிந்து புதிய சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது.

மிகக் குறுகலான இடத்தில் இந்த டோல்கேட் அமைந்து இருப்பதால் வாகனங்கள் கடந்து செல்வது என்பது அவ்வளவு வேகமாக நடக்காது, மேலும் திருவண்ணாமலையிலிருந்து வேலூர் வரை நான்கு வழி சாலை கிடையாது. இரட்டை வழிச்சாலை தான். அதன் காரணமாக மீடியன் என்று சொல்லப்படுகின்ற சாலை தடுப்பான்கள் நடுவில் போட முடியாது . மேலும் இந்த பாதையில் அடிக்கடி வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்வதும் அதன் காரணமாக உயிர் பலி ஏற்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேலூர் திருவண்ணாமலை பாதையை நான்கு வழி பாதையாக மாற்றாமல் தற்போது இருக்கும் நிலையிலேயே டோல்கேட் அமைத்து வாகன வரி வசூல் செய்வது என்ன நியாயம் என பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இப்பணியை துவக்கிய 2017 ஆம் ஆண்டில் இருந்தே வியாபாரிகள் , பொதுமக்கள் திருவண்ணாமலைக்கு டோல்கேட் தேவை இல்லை,காரணம் திருவண்ணாமலை வேலூர் சாலையில் ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் இருந்து அடிக்கடி நகருக்கு பலர் பல வாகனங்களில் வந்து செல்வார்கள், ஒவ்வொரு முறையும் வந்து செல்கிற போது வாகன வரி வசூல் செய்வது அவர்களுக்கு இடையூறாக இருக்கும் என டோல்கேட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் பல கிராமங்களில் இருந்து தினமும் விவசாய பொருட்கள் காய்கறிகள், பூக்கள் போன்றவை திருவண்ணாமலை நகருக்கு வருகின்றது.

இது பற்றி பேருந்து உரிமையாளர்கள், ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும் போது டோல்கேட் அமைக்கிறோம் என்றால் அந்த சாலையில் கிராம மக்களே இருக்கக் கூடாது முழுமையாக புறவழி சாலையாக அந்த பாதை இருக்க வேண்டும் அப்பொழுதுதான் டோல்கேட் அமைக்கப்பட வேண்டும் ஆனால் திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் வரை வழி அனைத்திலும் கிராமங்களே இருக்கின்றன எதற்காக இவர்கள் இப்படிப்பட்ட டோல்கேட் அமைத்தார்கள் என தெரியவில்லை என்று கூறினார்கள்.

திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள டோல்கேட், பல விதிகளை பொருந்தாமலேயே இந்த டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்களுக்கு இடையூறுகள் ஏற்படுமே ஒழிய வசதிகள் கிடையாது என்றும் சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான எ.வ வேலு உடனடியாக இதற்கு தீர்வு காண்பார் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் இனாம்காரியந்தல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் உபயோகிப்பாளர் கட்டணம் வசூல் செய்வதை ரத்து செய்யக்கோரி சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், வியாபாரிகள் சங்கம், பஸ் உரிமையாளர்கள் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம் ஆகியோர் தனி, தனியாக மாவட்ட கலெக்டர் முருகேசிடம் மனு அளித்தனர்.

அப்போது தி.மு.க. மருத்துவரணி துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி.சரவணன், பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தாமோதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், வழக்கறிஞர்கள் கே.வி.மனோகரன், நா.பழனி, கோ.புகழேந்தி, அ.அருள்குமரன், முரளி, பிரியா விஜயரங்கன், ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட வணிகர்கள் சங்கத் தலைவர் மண்ணுலிங்கம், தாலுகா வியாபாரிகள் சங்கத் தலைவர் டி.எம்.சண்முகம், மாநில கூடுதல் செயலாளர் ராஜசேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil