மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த பொதுமக்கள்!

மஹாளய அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய குவிந்த  பொதுமக்கள்!
X

முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் தந்து வழிபாடு செய்த பொதுமக்கள்

திருவண்ணாமலையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் குவிந்தனர்

திருவண்ணாமலையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய பொதுமக்கள் குவிந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மஹாளயா அமாவாசை முன்னிட்டு, கோயில் மற்றும் ஆற்றங்கரையில் சிறப்பு தர்ப்பணம் செய்து பிதுர்களை வழிபட்டு வருகின்றனர்.

மஹாளயா அமாவாசை முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கான கடைசி வாய்ப்பை வழங்குகிறது. அதே நேரத்தில், இது மகிழ்ச்சியான நவராத்திரி கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கிறது,

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட மகாளய அமாவாசை திதி கொடுப்பதற்கு ஏற்றதாகும். புரட்டாசி மாதத்தின் பெளர்ணமி தொடக்கம் முதல் அமாவாசை நாள் வரையிலான 15 நாட்கள் மஹாளய பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது. இன்று அமாவாசை திதியுடன் இந்த மஹாளய பட்சம் நிறைவடைகிறது.

மகாளய அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை நினைவு கூற வேண்டும். மேலும் புனித நீர் நிலைகளுக்கு சென்று நீராடி நம் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்ய வேண்டும்.

அமாவாசை நாட்களில் நமது முன்னோர்கள் பூமிக்கு வந்து தங்கள் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று அவர்களை ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. இந்த நாட்களில் சிரத்தையோடு முன்னோர்களை வழிபட்டால் தீர்க்க ஆயுளுடன் புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், மகிழ்ச்சி ஆகியவை நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். சாதாரண அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது 3தலைமுறை முன்னோர்களை சென்று சேரும்.

மகாளய அமாவாசை தினத்தில் கொடுக்கப்படும் தர்ப்பணம் தாய்வழி, தந்தைவழி முன்னோர்களுக்கு மட்டுமின்றி, நமது ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்களுக்கும் தர்ப்பணம் கொடுப்பதற்கு சமமாகும்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மகாளய அமாவாசை தினமான இன்று காலை ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் உள்ள அய்யங்குளம், கிரிவலப் பாதையில் உள்ள தீர்த்தங்கள் மற்றும் தண்டராம்பட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆறு, கவசப்பாக்கம் ஆறு, ஆரணி கமண்டல நதிக்கரை, செய்யாறு, ஆகிய பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையில் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

மேலும் வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் ஓத எள்,பச்சரிசி, தர்பை புல், பூ உள்ளிட்ட பொருட்களால் பூஜைகள் செய்து தங்கள் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து