பாசஞ்சர் ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: ரயில் பயணிகள் கோரிக்கை
கொரோனா எதிரொலியால் கடந்த 16 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள விழுப்புரம் - திருப்பதி, விழுப்புரம் - காட்பாடி இடையேயான பாசஞ்சர் ரயில்களின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்ட 3 பாசஞ்சர் ரயில்கள், 5 விரைவு ரயில்கள் மற்றும் 2 அதிவிரைவு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. ரயில்வே நிர்வாகமும் லாபம் ஈட்டியதால், ரயில் சேவை தொடர்ந்தது. இதன்மூலம் அரசு மற்றும் தனியார் பணிக்குச் செல்பவர்கள், விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் அதிக அளவில் பயனடைந்தனர். வெகுஜன மக்களுக்கு எளிதாக இருந்த ரயில் சேவையானது, கொரோனா தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கால், திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்டு வந்த ரயில்களின் சேவையானது முற்றிலும் நிறுத்தப்பட்டது. பின்னர், மத்திய, மாநில அரசுகள் தளர்வுகளை ஏற்படுத்தியதால், சிறப்பு ரயில்களைப் படிப்படியாகத் தென்னக ரயில்வே இயக்கியது. விழுப்புரத்தில் இருந்து கோரக்பூர், புருலியா, திருப்பதியில் இருந்து மன்னார்குடி, ராமேசுவரம் மற்றும் புதுச்சேரியில் இருந்து ஹவுரா, மும்பை தாதர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
அதே நேரத்தில், விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு தினசரி இயக்கப்பட்ட 2 பாசஞ்சர் ரயில்கள், விழுப்புரத்தில் இருந்து காட்பாடிக்கு தினசரி இயக்கப்பட்ட ஒரு பாசஞ்சர் ரயில் மற்றும் புதுச்சேரியில் இருந்து திருப்பதிக்கு ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் இயக்கப்பட்ட விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. கொரோனா எதிரொலியாக ஏப்ரல் 2020-ல் முடக்கப்பட்ட 4 ரயில்களின் சேவையும் மீண்டும் தொடங்கவில்லை.
இதற்கு மாற்றாக விழுப்புரத்தில் இருந்து திருப்பதிக்கு, சிறப்பு ரயில் என்ற பெயரில் தினசரி ஒரு விரைவு ரயில் மட்டும் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் பயணிக்க முன்பதிவு அவசியம் என்பதால் மக்களிடம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் பேருந்தில் செல்வதற்கு டிக்கெட் விலை ரூபாய் 50 என உள்ளது. அதேவேளையில் ரயில் வண்டியில் செல்வதற்கு ரூ. 20 தான் உள்ளது.
திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்வதற்கு பேருந்து கட்டணம் ரூ. 80 அதே ரயில் வண்டியில் செல்வதற்கு ஒருவருக்கு 30 ரூபாய் தான். வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவமனைக்கு திருவண்ணாமலையில் இருந்து செல்வதற்கு ரயில் வண்டியில் செல்வது நோயாளிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.
திருவண்ணாமலையிலிருந்து மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் வேலூர் சிஎம்சி அல்லது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டும். இந்த இரண்டு பகுதிகளுக்கும் செல்ல வேண்டுமென்றால் ரயில் பயணம்தான் கட்டணமும் குறைவு நோயாளிகளுக்கும் வசதியாக இருக்கிறது
இந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, அனைத்து வகையான பொதுப் போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில், திருவண்ணாமலை வழியாக இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரயில்கள் மற்றும் ஒரு விரைவு ரயிலின் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில் பயணிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களும் வலியுறுத்தி உள்ளனர். இது தொடர்பாகத் தமிழக அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தென்னக ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் வலியுறுத்தி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu