திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் சந்தை விழா

திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் சந்தை விழா
X

கலசை விதை மலரினை வெளியிட்ட சந்தை  மையத்தின் பொறுப்பாளர் ராஜேந்திரன், உடன் பெண்கள் விவசாய சங்க நிர்வாகி சுமதி மற்றும் நிர்வாகிகள்

ஒவ்வொரு மாதத்தின் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில், இயற்கை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம்.

திருவண்ணாமலை பெரியார் சிலை எதிரே உள்ள கர்மேல் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் இயற்கை விவசாய சந்தை நடைபெற்றது.

இந்த சந்தையில் இயற்கை விவசாயிகள் மூலம் பயிரிடப்பட்ட காய்கறிகள் கிழங்குகள், பழங்கள், மூலிகைகள், கீரைகள் மற்றும் பாரம்பரிய விதைகளான சிவப்பு வெண்டை, சிவப்பு உருட்டு வெண்டை, கஸ்தூரிவெண்டை, பூனை காளி, ஊசி மிளகாய், பேடகி மிளகாய் மஞ்சள், மக்காச்சோளம், சிவப்பு மக்காச்சோளம், மஞ்சள் பூசனி, வெண்பூசனி குடுவை சுரை, சூரியகாந்தி, மாயன்கீரை மற்றும் 40 க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் பயிறு பிற தானியங்கள் எண்ணை வித்துக்கள் விற்பனைக்கு வந்திருந்தன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து செங்கம், புதுப்பாளையம், கலசபாக்கம், சொர்ப்பனந்தல், கடலாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் நிலங்களில் இயற்கையாக விளைந்த புடலங்காய், பீர்க்கங்காய், வெண்டைக்காய், பாகற்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான நாட்டு காய்கறிகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.

இது மட்டுமின்றி, கற்பூர வாழை, ஏலக்கி வாழை, செவ்வாழை உள்ளிட்ட பல்வேறு வகையான இயற்கையாக விளைந்த பழ வகைகளையும் விற்பனைக்கு கொண்டு வந்தனர். மேலும், பண்ணை கீரை, அரை கீரை, சிறு கீரை, பொன்னாங்கண்ணி கீரை மற்றும் சிறு தானிய வகைகளான சாமை, வரகு, தினை, குதிரை வாலி உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களையும் கொண்டு வந்து விற்பனை செய்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இயற்கை காய்கறி சந்தையில், ஏராளமான பொதுமக்கள், இயற்கையாக விளைந்த காய்கறி மற்றும் பழங்களை மகிழ்ச்சியுடன் வாங்கிச் சென்றனர்.

இந்த சந்தையில் பாரம்பரிய விதை மையம் சார்பில் உழவர்களின் மரபு நெல்வகைகள், கீரை வகைகள், காய்கறி வகை மற்றும் மானாவரி தானியங்களின் விதைகளின் பகிரவு மற்றும் விற்பனைக்கான பட்டியல் அடங்கிய கலசைவிதை மலரினை பாரம்பரிய விதை மையத்தின் பொறுப்பாளர் ராஜேந்திரன் வெளியிட நயம்பாடி விதை ஆராய்ச்சியாளர் சிவலிங்கம் பெற்றுக்கொண்டார்.

இதில் களஞ்சியம் பெண்கள் விவசாய சங்க நிர்வாகி எஸ்.சுமதி, பேராசிரியர் முரளிராஜன் விதை சேகரிப்பாளர் சந்திரசேகரன் மற்றும் இயற்கை விவசாயிகள் கௌரி, சத்திய பிரகாசம் கீழ்சிறுப்பாக்கம் சுரேஷ் உள்பட இயற்கை விவசாயிகள், விவசாய பிரதிநிதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story