திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் கார் முன் விழுந்து மூதாட்டி கதறல்
மூதாட்டியை கை தாங்கலாக அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லும் கலெக்டர் முருகேஷ்
திருவண்ணாமலைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்நாள் கூட்டம் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.
இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை பட்டா, சாதி சான்றிதழ், முதியோர் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, மாற்றுத் திறனாளிகள் உபகரணங்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திய 450 -க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
பொதுமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.மேலும் நிலுவையில் உள்ள மனுக்களின் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அவர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மிராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் வெங்கடேசன், மாவட்ட பழங்குடி நல அலுவலர் செந்தில்குமார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள், நல உதவிகளை வழங்கினார்
திங்கட்கிழமை தோறும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் ஒவ்வொரு வாரமும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.தாங்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தீர்வு கிடைக்காததால் மண்ணெண்ணையை உடம்பில் ஊற்றி தீக்குளிக்க முயலும் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதை தடுக்க மனுதாரர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர் ஆனாலும் தீக்குளிப்பு முயற்சிகளை தடுக்க முடியவில்லை.
பின்னர் தீ குளிப்பு நிகழ்வுகளை தடுக்க போலீசாருக்கு தீ தடுப்பு உபகரணங்களை வழங்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.கலெக்டர் அலுவலகத்தில் பிரதான வாயிலை தவிர அனைத்து வாயில்களையும் மூட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார். இதன் காரணமாக தீக்குளிப்பு சம்பவங்கள் சற்று குறைந்தது.
ஆட்சியரின் கார் முன் விழுந்து புரண்ட மூதாட்டி... இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆட்சியரின் கார் போர்டிகோவில் நுழைய அந்த நேரத்தில் ஒரு மூதாட்டி ஒருவர் திடீரென காரின் முன்படுத்து அழுது புரண்டார் .
இதனை சற்றும் எதிர்பாராத ஆட்சியரின் வாகன ஓட்டுனர் சற்று தொலைவிலேயே பிரேக் போட்டு நிறுத்தினார். காரில் இருந்து இறங்கிய ஆட்சியர்.மூதாட்டி இடம் விசாரித்து கை தாங்கலாக அலுவலகத்திற்குள் அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைத்து அவரிடம் பொறுமையாக அவரது குறையை கேட்டறிந்தார்.
ஆட்சியர் அந்த மூதாட்டியை திட்ட போகிறார் என்று டென்ஷனில் இருந்த அதிகாரிகளும் பொதுமக்களும் ஆட்சியரின் மனிதநேய செயலால் மகிழ்ச்சி அடைந்தனர். பின்பு அந்த மூதாட்டி இடம் இப்படி பண்ணாதீங்க உங்க பிரச்னையை மனுவா குடுங்க என்று பொறுமையாக அவரிடம் அறிவுரை கூறி உங்கள் பிரச்சனை தான் என்ன கேட்டு அறிந்தார்.
அதற்கு அந்த மூதாட்டி தான் மலமஞ்சனூரை சார்ந்த சீதா என்பதும், தனது பெயருக்கு பட்டா மாற்றி திருத்தம் செய்து தர வேண்டும். இது சம்பந்தமாக ஏற்கெனவே பலமுறை மனு கொடுத்து இருக்கிறேன் ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவித்தார்.
இது சம்பந்தமாக அங்கு இருந்த அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தபின்னர், இது சம்பந்தமாக ஏற்கெனவே உத்தரவு வழங்கப்பட்டுவிட்டதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளைப் போய் பாருங்கள் பாட்டி என்று அவருக்கு பொறுமையாக சொல்லி அனுப்பினார் ஆட்சியர். இந்நிகழ்வால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu