திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு
அண்ணாமலையார் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களின் கூட்டம்.
அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.
அதிலும் குறிப்பாக தொடர் விடுமுறை தின நாட்களில் பக்தர்கள் கோவில் உள்பிரகாரம் மட்டுமின்றி கோவிலின் வெளிபுறத்திலும், மாட வீதி வரையும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றனர். அப்போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி முதல் 5 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக கூறப்படுகிறது. இதனால் பக்தர்கள் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர்.
திலும் மாற்றுத்திறனாளிகள் வயதானவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு என பல பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்ய செல்லும் வரிசையை முறைப்படுத்த வேண்டும் என்றும், கோவிலுக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த சரியான முறையில் பார்க்கிங் வசதி இல்லை என்றும், சிறப்பு தரிசன டிக்கெட் பெற்று சென்றாலும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்றும், கோவிலில் புரோக்கர்கள் அதிகமாக உள்ளனர் என்றும், நீண்ட நேரம் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பக்தர்கள் ஏராளமானோர் கோரிக்கை மனு விடுத்திருந்தனர்.
மேலும் அடுத்த மாதம் சித்ரா பௌர்ணமி வருகிறது சித்ரா பௌர்ணமியின் போது திருவண்ணாமலையில் 15 லட்சத்திற்கு மேல் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். மேலும் கோவிலிலும் சாமி தரிசனம் செய்வார்கள். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு பிறகு லட்சக்கணக்கான மக்கள் அதிகமாக வருவது சித்ரா பௌர்ணமி கிரிவலம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் விரைந்து தரிசனம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு அதிகாரி குமரகுருபரன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் கோவிலில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
பவுர்ணமி நாட்களில் பக்தர்களை நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைக்காமல் ஆயிரங்கால் மண்டபம் உள்பட குறிப்பிட்ட இடங்களில் அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்வது குறித்தும் கோவில் அலுவலர்களிடம் அவர் ஆலோசனை வழங்கினார்.
அப்போது கோவில் இணை ஆணையர் குமரேசன், விழுப்புரம் இணை ஆணையர் சிவக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள், பணியாளர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu