திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா

திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
X

இயற்கை உணவு திருவிழாவில் ஆர்வமுடன் கலந்து கொண்ட பொதுமக்கள்

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் பெரியார் சிலை எதிரில் , கர்மேல் கிண்டர் கார்டன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த இயற்கை உணவு திருவிழாவில் திருவண்ணாமலையை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

இந்த உணவு திருவிழாவில் திறந்த வெளி அரங்குகளில் பாரம்பரிய அரிசி வகைகள், சிறு தானியங்கள், உள்ளூர் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தின்பண்டங்கள், உணவுப் பொருட்கள், மரபு விதைகள், மூலிகைச் செடிகள், இயற்கை விவசாயிகளின் விலைப் பொருட்களும் கைவினைப் பொருட்களும், விவசாயம் சார்ந்த புத்தகங்களும் விற்பனை செய்யப்பட்டது.

மேலும் சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட சிற்றுண்டி உணவுகள், இட்லி பொடி , வெள்ளை கேழ்வரகு, உள்ளிட்டவை இயற்கை விவசாயிகளால் விற்பனை செய்யப்பட்டன.

இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளில் கிச்சடி சம்பா, தங்க சம்பா, கருப்பு கவுனி, கேழ்வரகு, வரகு, சாமை போன்ற அரிசி வகைகள், கலப்படமற்ற உணவு எண்ணெய், மலைத்தேன், இயற்கை பெருங்காய ஊறுகாய், சிறு தானிய காபி பொடி, உள்ளிட்டவைகளும் விற்பனை செய்யப்பட்டன.

சிறுதானியங்கள் மூலம் செய்யப்பட்ட சிற்றுண்டி உணவு வகைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி உண்டு சுவைத்து மகிழ்ந்தனர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்து தற்போது நாம் மறந்து போன உணவு வகைகளை, நெல் ரகங்களை, சிறு தானிய உணவு வகைகளை, உடலுக்கு ஆரோக்கியமான உணவு வகைகளை தற்போது தனித்தனியாக அரங்குகள் அமைத்து இந்த தலைமுறைக்கும் நினைவூட்டி அதனை பயன்படுத்தும் விதங்கள் குறித்தும் விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் எடுத்துரைத்தது மிக பயனுள்ளதாக இருந்தது என மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

இந்த இயற்கை விவசாயிகள் உணவு திருவிழா நோக்கம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில், இயற்கை விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாகவும், அவர்களுக்கு சந்தை வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் நோக்கத்துடனும், தற்போது நாம் மறந்து போன உணவு வகைகள் குறித்து இப்போதைய தலைமுறை தெரிந்து கொள்வதற்காகவும் இந்த உணவு திருவிழா நடத்தப்படுகிறது என தெரிவித்தார்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சுமதி, பழனி, சந்திரசேகர், முரளி ராஜன், கௌரி, மோகன் மற்றும் கூட்டமைப்பு நிர்வாகிகள் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!