திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் பெயர், சின்னம் பொருத்தும் பணி
திருவண்ணாமலை நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் வருகிற 19-ந்தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் சார்பில் 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
திருவண்ணாமலை நகராட்சியில் அதிகபட்சமாக 23 மற்றும் 37-வது வார்டுகளில் 15 பேரும், குறைந்தபட்சமாக 4-வது வார்டில் 3 பேரும் களம் காண்கின்றனர். இங்கு 144 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் தலா ஒரு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
நகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் நகராட்சி அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகராட்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது.
நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி தலைமை தாங்கினார். இதில் அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பெயர், சின்னம் பொருத்தப்பட்டது.
பின்னர் வாக்குப்பதிவு எந்திரத்தில் மாதிரி வாக்குப்பதிவு செய்து சோதனை செய்து பார்க்கப்பட்டது. மேலும் வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான பொருட்கள் பிரித்து வைக்கப்பட்டு தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
வந்தவாசி நகராட்சியில் உள்ள 24 வார்டு பதவிகளுக்கு 117 பேர் போட்டியிடுகின்றனர். அதற்காக 34 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி வந்தவாசி நகராட்சி அலுவலகத்தில் நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் முஸ்தபா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆனந்தகுமார், அகத்தீஸ்வரன் உள்ளிட்ட தேர்தல் ஊழியர்கள், பெட்டியில் இருந்து வாக்குப்பதிவு எந்திரம், கண்ட்ரோல் யூனிட் எந்திரம் ஆகியவற்றை வார்டு வாரியாக வேட்பாளர்கள் முன்னிலையில் செயல்விளக்கம் அளித்தனர். பின்னர் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பட்டியலை பொருத்தி 'சீல்' வைத்தனர்.
போளூர் சிறப்பு நிலை பேரூராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி தேர்தல் நடத்தும் அதிகாரி முஹம்மது ரிஸ்வான் தலைமையில் நடைபெற்றது.
அப்போது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் ரவி, காசி, குப்புசாமி, வட்டார தேர்தல் அலுவலர்கள் மஞ்சுளா, அருள், தலைமை எழுத்தர் முகமது ஈசாக் மற்றும் வேட்பாளர்கள் இருந்தனர்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மேற்பார்வையில் நடந்தது.
அப்போது தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜா, சங்கர், இளநிலை உதவியாளர் வீரமணி மற்றும் வேட்பாளர்கள் இருந்தனர்.
கண்ணமங்கலம் புதுப்பேட்டை பகுதியில் ஆரம்பப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நேற்று வேலூர் சரக டி.ஐ.ஜி. ஆனி விஜயா நேரில் வந்து ஆய்வு செய்தார்.
அப்போது கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜாவிடம், வாக்குச்சாவடி மையங்களில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu