சாதியே கிடையாது என்ற வகையில் சமத்துவபுரத்தை உருவாக்கியவர் கருணாநிதி: அமைச்சர் வேலு
உறுப்பினர் சேர்த்தலை தொடங்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு
'தமிழர்கள் நலனுக்காக, தமிழர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக, தமிழர்களின் சமுதாயம் மேம்பட வேண்டும் என்று உருவாக்கப்பட்ட கட்சி தான் திமுக'' என திருவண்ணாமலையில் நடைபெற்ற திமுக உறுப்பினர் சேர்க்கை கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உரையாற்றினார்.
திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க. சார்பில் திருவண்ணாமலை டாக்டர் அம்பேத்கர் பகுதி வார்டு எண்-2-ல் உடன்பிறப்புகளாய் இணைவோம் என்ற கட்சி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். தொகுதி பார்வையாளர் டாக்டர் மாலதிநாராயணசாமி, மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் அமைச்சரும், கட்சி உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உறுப்பினர் சேர்த்தலை தொடங்கி வைத்தார்.
முன்னதாக அவர் பேசுகையில், அரசின் சாதனைகளை தொடர்ந்து பெண்களும், தாய்மார்களும் அதிகளவில் கழகத்தில் இணைவதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த ஆட்சி பெண்களுக்கான தாய்மார்களுக்கான ஆட்சி. குறிப்பாக பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தொகை ரத்து, அண்ணா பிறந்தநாளில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படவுள்ளது. 5 முறை தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த கருணாநிதி பல எண்ணற்ற திட்டங்களை தீட்டி, நவீன தமிழகத்தை உருவாக்கினார்.
சமுதாயப் புரட்சியை தமிழ்நாட்டில் ஏற்படுத்தி சாதியே கிடையாது என்ற வகையில் சமத்துவபுரத்தை உருவாக்கியவர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களை உருவாக்கியவர். கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் பல முதலமைச்சர்கள் தமிழ்நாட்டை ஆண்ட போதிலும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் ஏழை எளிய மக்களுக்காகவும், நடுத்தர மக்களுக்காகவும், குறிப்பாக ஆதி திராவிட மக்களுக்காகவும் பல திட்டங்களைக் கொண்டு வந்தார். மேலும் தொழிலாளர்களின் நலனுக்காகப் பல திட்டங்களை மறைந்த கொண்டு வந்தார். அருந்ததிய இன மக்களுக்கு மூன்று சதவீத இட ஒதுக்கீட்டைக் கொண்டு வந்தார். அருந்ததிய இன மக்கள் பல உயர் பதவிகளில் இருக்கக் காரணமானவரும், அவர் தான் தான்'' என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
திருவண்ணாமலை தொகுதி இன்று வரை தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதற்கு காரணம் உங்களை போன்ற உழைக்கும் மக்களின் ஆதரவு தான். நமது மாவட்டத்தில் அதிக அளவில் உறுப்பினர்களை சேர்ப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவோம் என்றார்.
இதில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம், மாவட்ட துணை செயலாளர் ப்ரியா விஜயரங்கன், டி.வி.எம்.நேரு, மாவட்ட கழக நிர்வாகிகள் விஜயராஜ், தொமுச ஆறுமுகம் , நகர மன்ற துணைத் தலைவர் ராஜாங்கம், நகர மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu