வாடகை செலுத்தாத கடைகளுக்கு நள்ளிரவில் சீல்: நகராட்சி ஊழியர்கள் அதிரடி
சீல் வைக்கப்பட்டிருந்த கடையில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸ்
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட கடைகள் வணிக பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இந்த கடைகள் பொது ஏலம் மூலம் வாடகைக்கு விடப்படும். ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகும் வாடகை உயர்வு அறிவிக்கப்பட்டு பழைய வாடகைதாரர்களிடமே வாடகைக்கு விடப்படும்.
இந்த நிலையில் இந்த செயல்பாடுகள் நின்று திடீரென்று அரசு வாடகைகளை 200 சதவிகிதம்அதிகமாக மாற்றியது. இதன் காரணமாக வணிகர்கள் தங்கள் வாடகைகளை குறைக்கும் படி போராட்டங்கள் நடத்தினர். அதன் காரணமாக வழக்கும் தொடரப்பட்டது .இந்த நிலையில் வாடகை கட்டாமல் வணிகர்கள் நிலுவை வைத்திருந்தனர். தற்போது நிலுவைத் தொகைகளை வசூலிக்கும் முயற்சியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
40 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் வரவேண்டிய திருவண்ணாமலை நகராட்சிக்கு சில கோடிகள் மட்டுமே வருமானம் வந்துள்ளதாக நகர மன்ற ஊழியர்கள் கூறுகிறார்கள்.
எனவே வாடகை நிலுவைத் தொகைகளை பெறுவதற்காக நகராட்சி மூலம் வணிகர்களுக்கு நோட்டீஸ் விடப்பட்டது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும் வாடகை கட்டாதவர்களின் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என அறிவிப்பும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் திருவண்ணாமலை தேரடி தெருவில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. ஜோதி மார்க்கெட் என்று அழைக்கப்படும் இந்த பூ மார்க்கெட்டில் சுமார் 130 கடைகள் உள்ளன. அனைத்தும் திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமானதாகும்.
இங்குள்ள கடைக்காரர்களிடமிருந்து திருவண்ணாமலை நகராட்சிக்கு ரூபாய் 4 கோடிக்கு மேல் வாடகை பாக்கி வர வேண்டியது உள்ளதாக நகராட்சி ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அங்குள்ள வியாபாரிகள் தெரிவிக்கையில் நகராட்சி கடைகளில் வாடகை உயர்த்தப்பட்ட போது ஜோதி மார்க்கெட் உள்ள கடைகளில் தரை வாடகை ரூபாய் 800 லிருந்து 8000 ஆகவும், கடைகளுக்கு 1200 ரூபாயிலிருந்து 12,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.
மேலும் பூ வியாபாரிகள் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கிடும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு தரை வாடகை ரூபாய் 8 ஆயிரத்தில் இருந்து 12000 ஆகவும் கடை வாடகை 12 ஆயிரத்திலிருந்து 22 ஆயிரம் ஆகவும் அதாவது. சுமார் 200 மடங்கு வரை வாடகை உயர்த்தப்பட்டதால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அதனைக் கண்டித்து சில மாதங்களுக்கு முன்பு பூ வியாபாரிகள் பூக்களை ரோடில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதைத்தொடர்ந்து வாடகையை நிர்ணயம் செய்ய அரசு குழுவை நியமித்துள்ள நிலையில், நகராட்சி அதிகாரிகள் இதைப்பற்றி கவலைப்படாமல் நேற்று முன்தினம் நள்ளிரவில் பூ மார்க்கெட்டுக்கு சென்று ஐந்து கடைகளுக்கு சீல் வைத்தனர்.
அந்த கடையின் ஷட்டரில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீசில், திருவண்ணாமலை நகராட்சிக்கு சொந்தமான கடைக்கு செலுத்த வேண்டிய வாடகை செலுத்தப்படாமல் உள்ளது, எனவே தமிழ்நாடு மாவட்ட சட்ட நகராட்சிகளின் பிரிவுகளின் படி, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிகளின்படியும் தற்போது தாங்கள் நடத்தி வரும் கடையினை நகராட்சியால் நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைக்கப்பட்டு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடையின் உரிமம் ரத்து செய்வதன கடையை பொது ஏலம் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது என்று அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் தங்களது சங்க நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்நிகழ்வு குறித்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகம் தெரிவிக்கையில் நகராட்சி அலுவலர்கள் தொடர்ந்து எடுபிடி செய்து வந்தால் மீண்டும் போராட்டத்தில் இறங்குவது குறித்தும் நகர மன்ற தலைவரை சந்தித்து பேசுவது குறித்தும் சங்க நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.
எது எப்படி ஆயினும் இரவு 12 மணிக்கு கடைக்காரர்களுக்கு தெரியாமல் நடுராத்திரியில் சீல் வைப்பது நியாயமா? என கடை உரிமையாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu