திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாணிக்கவாசகர் உற்சவ வீதியுலா

மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த மாணிக்கவாசகர்.
நாயன்மார்கள் நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகருக்கு திருவண்ணாமலையில் தனி ஆலயம் உள்ளது. கிரிவல பாதையில் வருணலிங்கம் அருகே அடிஅண்ணாமலை ஆலயத்திற்கு செல்லும் பாதை திருப்பத்தில் அந்த ஆலயம் அமைந்துள்ளது.
திருவண்ணாமலையில் எத்தனையோ மகான்கள் தங்கள் திருவடிகளை பதித்து சேவை புரிந்துள்ளனர். அவர்களில் மாணிக்கவாசகருக்கு தனி இடம் உள்ளது. அதற்கு காரணம் திருவண்ணாமலை தலத்தில் அவர் இயற்றிய திருவெம்பாவை பாடல்கள்தான்.
சிவபெருமான் திருவண்ணாமலையில் அடியும் முடியும் காண முடியாதபடி மலையாக வீற்றிருப்பதை உணர்த்தும் வகையில், “ஆதியும் அந்தமும் இல்லா அருப்பெரும் ஜோதியே” என பாடினார். அவர் மார்கழி மாதத்தில் இந்த பாடல்களை பாடினார். ஆதி அண்ணாமலை ஆலயத்தின் அருகே தீர்த்தக்குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்துக்கு மாணிக்கவாசகர் தீர்த்தக்குளம் என்று பெயர்.
9-ம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த பெண்கள் அந்த தீர்த்தக்குளத்தில் நீராடி இயற்கை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு “பாவை நோன்பு” இருப்பது வழக்கமாகும். அந்த பெண்கள் சிவபெருமானின் சிறப்புகளை பாட வேண்டும் என்பதற்காகவே மாணிக்கவாசகர் திருவெம்பாவையை படைத்தார். மாணிக்கவாசகர் தமிழ்நாட்டில் எத்தனையோ தலத்துக்கு சென்று இருந்தாலும் திருவண்ணாமலை தலத்தில் அவர் இருந்த நாட்கள் தனித்துவம் வாய்ந்தவை.
அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் மாணிக்கவாசகர் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மாணிக்கவாசகர் உற்சவம் கடந்த 18ம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. 3ம் நாளான நேற்று அலங்கார ரூபத்தில் மாணிக்கவாசகர் மாடவீதியில் வலம் வந்து அருள்பாலித்தார்.
உற்வசவத்தின்போது, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுவது சிறப்புக்குரியது. மாணிக்கவாசகர் உற்சவத்தின் நிறைவாக, வரும் 27ம் தேதி, அண்ணாமலையார் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் எழுந்தருளளும், ஆருத்ரா தரிசனமும் நடைபெற உள்ளது. மேலும், நாளை மறுதினம் (23ம் தேதி) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை 4 மணி முதல் 5 மணிக்குள், வேணுகோபால சுவாமி, கெஜலட்சுமி அபிஷேகமும், வைகுந்த வாயில் திறப்பும் நடைபெற உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu