கைம்பெண்கள் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் கடனுதவி

திருவண்ணாமலை மாவட்டத்தில் கைப்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடனுதவி வழங்கப்படுவதாக கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜெயம் ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2021-22-ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தின்போது கூட்டுறவுத்துறை அமைச்சரால், கூட்டுறவுத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள கைம் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீத வட்டியில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கடன் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதனால் தமிழ்நாட்டில் உள்ள 7,40,173 கைம்பெண்கள் மற்றும் கணவனை இழந்த பெண்கள் பயன்பெறுவார்கள் என்றும் அறிவித்து இருந்தார். அதன்படி திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையகம் மற்றும் 34 கிளைகளில் கடன் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் 5 சதவீத வட்டியில் குறைந்தபட்ச கடன்தொகை ரூ.5 ஆயிரமும், அதிகபட்ச கடன்தொகை ரூ.25 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்தும் காலம் 120 நாட்கள். இத்திட்டத்தில் கடன் பெற்று பயன்பெறலாம். அதேபோல் வேளாண் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கடனை உரிய காலத்திற்குள் திருப்பி செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டித் தொகை முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது.
தற்போது இது விவசாய கடன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வரும் நிலையில் இனி கால்நடை பராமரிப்பு, வளர்ப்பு மற்றும் தொடர்புடைய கடன்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் வேளாண் கடன் அட்டை (கே.சி.சி.) திட்டத்தின் கீழ் விவசாயிகள், கால்நடை வளர்ப்பு மற்றும் அவை சார்ந்த தொழில்களில் ஈடுபடுவோர்கள் தங்களின் நடைமுறை மூலதனக் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி பயன்பெறலாம். இந்த தகவலை கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் நடராஜன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ஜெயம் ஆகியோர் தெரிவித்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu