பக்தா்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் திருநங்கைகள் மீது சட்டப்படி நடவடிக்கை; ஆட்சியர் எச்சரிக்கை
கிரிவலம் வரும் பக்தர்களிடம் யாசகம் பெறும் திருநங்கைகள்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் புரட்டாசி மாத பெளா்ணமியையொட்டி, கிரிவலம் வரும் பக்தா்களுக்குத் தேவையான முன்னேற்பாட்டு பணிகளை மேற்கொள்வது குறித்து அரசுத்துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் ராம் பிரதீபன், அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜோதி ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பேசியதாவது:
பெளா்ணமி நாளில் (செப்.17) பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வருவா். எனவே, பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து செய்து முடிக்க வேண்டும்.
போக்குவரத்து சீரமைப்புப் பணி, தாற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைக்கும் பணி, கிரிவலப் பாதாயை தூய்மைப்படுத்தும் பணி ஆகியவற்றை உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும். கிரிவலப்பாதை, கோயிலின் உள்புறம் ஆகிய இடங்களில் போதுமான மருத்துவ முகாம்களை அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் 108 அவசர ஊா்தியை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
காவல்துறை சாா்பில் போதிய அளவிலான காவலா்களை நியமனம் செய்து கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள வேண்டும். கிரிவலப் பாதையில் ஆக்கிரமிப்புகளைத் தவிா்க்க அனைத்து அரசுத் துறைகளின் சாா்பில் ஒருங்கிணைப்பு அலுவலா்களை நியமிக்க வேண்டும். கிரிவலப் பாதையில் பாதுகாப்பற்ற குடிநீா், குளிா்பானங்கள் விற்பனை செய்வதை உணவு பாதுகாப்புத்துறை அலுவலா் கண்காணித்து தடுக்க வேண்டும்.
திருநங்கைகள் யாசகம் பெறுவோர் மீது நடவடிக்கை
திருநங்கைகள் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை சமூக நலத்துறை அலுவலர்கள் திருநங்கைகளுக்கு அறிவுரைக்கூட்டம் நடத்தி தெரிவிக்க வேண்டும். அதே போன்று குழந்தைகளை வைத்து யாசகம் பெறும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். யாசகம் பெறும் முதியோர்கள் மற்றும் உடல்நலன் பாதிக்கபட்டவர்களை விசாரித்து காப்பகத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நலத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாண்டியன் அறிவுறுத்தினார்.
பக்தர்கள் மகிழ்ச்சி
மாவட்ட ஆட்சியரின் இந்த எச்சரிக்கை நடவடிக்கையால் பக்தர்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்
கிரிவலம் வரும் பக்தர்களிடம் குறிப்பிட்ட சில பகுதிகளில் திருநங்ககைள் குழுக்களாக நின்று இடையூறு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அடாவடி வசூலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. அப்படி காசு கொடுக்காமல் செல்லும் பக்தர்களை திருநங்கைகள் மிரட்டி பணம் பறிப்பதாகவும், பணம் கொடுக்கவில்லையென்றால் தரக்குறைவாக பேசுவதாக புகார் எழுந்தது. குறிப்பாக ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களை சேர்ந்தவர்களை குறி வைத்தே திருநங்கைகள் இதுபோன்று செய்து வந்தனர். அதேபோல் அண்ணாமலையார் கோவில் வீட்டு வாசலில் இதுபோன்று சம்பவம் நடைபெறுகிறது.
இதனால், கிரிவலம் செல்லும் பக்தர்கள் ஒரு வித அச்சத்துடனே செல்வதாக கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பக்தர்கள் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் திருநங்கைகள் திருக்கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கிரிவலப் பாதை முழுவதும் கண்காணித்து மாவட்ட ஆட்சியரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu