திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டம்

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் மன்னார்குடி விரைவு ரயிலை நிறுத்தி மறியல் செய்த வழக்கறிஞர்கள்

மத்திய அரசுக்கு எதிராக திருவண்ணாமலையில் வழக்கறிஞர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று கிரிமினல் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி திருவண்ணாமலை மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை ரயில் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

கிரிமினல் சட்டங்களான இந்திய தண்டனைச் சட்டம் பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) என்றும், இந்திய குற்றவியல் விசாரணை முறைச்சட்டம் பாரதிய நகரிக் சுரக்க்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) என்றும், இந்திய சாட்சியச்சட்டம் பாரதிய சாக்க்ஷய அதிநியம் (பிஎஸ்ஏ) என்றும் பெயர் மாற்றம் செய்யப்பட்டு, சட்டப் பிரிவுகளில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நேற்று (ஜூலை 1) முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம், என 13 நீதிமன்றங்களிலும் 500க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை ரயில் நிலையம் முன்பு வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை மன்னார்குடியில் இருந்து திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் முன் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தினால் மன்னார்குடி திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில் சிறிது நேரம் கால தாமதமாக புறப்பட்டு சென்றது.

மேலும் இந்த சட்டத்தினால் பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், ஏற்கனவே கைதிகளும் ஒரு நாள் லாக்கப்பில் இருந்தால் பாதுகாப்பு இல்லாத சூழலில் இருக்கும் போது தற்போது நீண்ட நாட்கள் வைத்து இருக்க வேண்டும் எனவும் கூறிய வழக்கறிஞர்கள் இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

மத்திய அரசு மறைமுகமாக சமஸ்கிருத திணிப்பில் ஈடுபடுவதாகவும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களை திரும்பப் பெறும் வரை வழக்கறிஞர்கள் போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவண்ணாமலை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் விஜயராஜ், திருவண்ணாமலை பார் அசோசியேஷன் தலைவர் நாகா சங்கர், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள், கலந்து கொண்டனர்.

நீதிமன்ற பணிகளுக்காக பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த பொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் நீதிமன்ற புறக்கணிப்பின் காரணமாக வாய்தா தேதி மட்டும் அறிந்து கொண்டு சென்றனர்.

Tags

Next Story