அண்ணாமலையார் கோவிலில் 1008 கலசபிஷேகம்..!
அண்ணாமலையார் கோயிலில் நடைபெற்ற 1008 கலசபிஷேகம்
கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், மே 4 முதல் தொடங்கி நேற்று மே 28 ஆம் தேதி நிறைவடைந்தது.
கத்திரி வெயில் என்று கூறப்படும் அக்னி நட்சத்திரம் நாட்களில், சூரிய வெப்பத்தின் தாக்கம் பூமியின் மீது அதிகமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் அக்னி நட்சத்திரம் நாட்களில் எந்தவிதமான சுபகாரியங்களும் செய்ய மாட்டார்கள்.
அக்னி நட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், கோயில்களில் மூலவர்களை குளிர்விக்கும் வகையில், தாரா பாத்திரத்தை உயர தொடங்கவிட்டு, அதன் அடியில் மெல்லிய துவாரமிட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த சிறப்பு வழிபாடு பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. பாத்திரத்தில் வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஏலக்காய் உள்ளிட்ட மூலிகைகளை போட்டு, அதில் பன்னீரை ஊற்றி மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆகும்.
இந்நிலையில் நேற்று அக்னி நட்சத்திரம் நிறைவடைந்ததை அடுத்து அக்னி நிவர்த்தி பூஜை சிறப்பாக நடைபெற்றது. அண்ணாமலையாருக்கு 1008 கலசமும் உண்ணாமுலை அம்மனுக்கு 108 கலசமும் ஸ்தாபித்து கலசாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த 26 ஆம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் அக்னி நிவர்த்தி பூஜை தொடங்கியது. நேற்று முனினம் திங்கட்கிழமை இரண்டாம் காலம் மற்றும் மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றது.
அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி நாளான நேற்று யாகசாலையில் நான்காம் கால யாகத்துடன் பூர்ணாஹுதி நடைபெற்று, பின்னர் யாகசாலையில் இருந்து 1008 கலசங்களை மேள வாத்தியத்துடன் வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து சென்று உச்சிக்கால வேளையில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மனுக்கு கலசாபிஷேகம் ஆனது வெகு விமரிசையாக நடைபெற்றது. நேற்று இரவு ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார் எழுந்தருளி மாடவீதி உலா நடைபெற்றது.
நேற்று அக்னிதோஷ நிவர்த்தி என்பதால் பக்தர்களின் வருகை மிக அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu