திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் ஜமாபந்தி துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் ஜமாபந்தி  துவக்கம்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கி மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 வட்டங்களிலும் 1431-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) தொடங்கியது

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு மனுக்கள் வழங்கினர். திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கி, நாயுடுமங்கலம் உள்வட்டத்திற்கு உட்பட்ட பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் பட்டா மாற்றம், உட்பிரிவு பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 169 மனுக்கள் பெறப்பட்டது.

இதில், 6 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் உதவி இயக்குனர் (நில அளவை) சுப்பிரமணியன், அலுவலக மேலாளர் (பொது) ரவி, வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன், தாசில்தார் சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் அமுல், வட்ட வழங்கல் அலுவலர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், விஜயலட்சுமி, வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

கீழ்பென்னாத்தூர் மாவட்ட வருவாய் அலுவலர் பங்கேற்பு:

கீழ்பென்னாத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தாசில்தார் சக்கரை, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பன்னீர்செல்வம், ஜமாபந்தி மேலாளர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேட்டவலம் வருவாய் உள்வட்டத்தை சேர்ந்த 27 கிராமங்களுக்கான கணக்குகள் சரிபார்க்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதிதாக பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை, வீடு அளவை, நில அளவை உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் வழங்கினர். இதில், மண்டல துணை தாசில்தார் வேணுகோபால், தலைமையிட துணை தாசில்தார் அப்துல்ரவூப், வட்ட வழங்கல் அலுவலர் மஞ்சுநாதன், தேர்தல் பிரிவு துணை தாசில்தார் மாலதி, தலைமையிட சர்வேயர் சாகுல்அமீது, துணை சர்வேயர் முனியன், வருவாய் ஆய்வாளர்கள் அல்லி (வேட்டவலம்), சுமதி (கீழ்பென்னாத்தூர்), மகாலட்சுமி (சோமாசிபாடி) மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

ஆரணி:

ஆரணி தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) கோ.குமரன் தலைமை தாங்கினார். கண்ணமங்கலம் உள்வட்டத்துக்கு உட்பட்ட காட்டுக்காநல்லூர், கொளத்தூர், கண்ணமங்கலம், வண்ணாங்குளம், 5.புத்தூர், அய்யம்பாளையம், மேல்நகர், கீழ்நகர், அத்திமலைப்பட்டு ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த கிராம பொதுமக்கள் பட்டா மாறுதல், பட்டா உட்பிரிவு, பட்டா திருத்தம், முதியோர் உதவித்தொகை, தெருவிளக்கு, சாலை பராமரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து புகார் மனுக்கள் அளித்தனர். இதில் 5.புத்தூர் கிராமத்தில் திருவிழா நடப்பதால் யாரும் மனு கொடுக்க வரவில்லை. அவர்கள் ஜமாபந்தி கடைசி நாளான 9-ந்தேதி மனுக்கள் தரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 6-ந்தேதி அக்ராபாளையம் உள்வட்டத்துக்கு உட்பட்ட சிறுமூர், பூசிமலைக்குப்பம், 12.புத்தூர், மொரப்பந்தாங்கல், வெட்டியாந்தொழுவம், அக்ராபாளையம், அரிப்பாடி, சேவூர், அடையபுலம், மெய்யூர், முள்ளன்டிரம் ஆகிய கிராம மக்களிடம் இருந்து குறை மனுக்கள் பெறப்படுகின்றன. 7-ந்தேதி முள்ளிப்பட்டு உள்வட்டத்துக்கும், 8-ந்தேதி எஸ்.வி.நகரம் உள்வட்டத்துக்கும், 9-ந்தேதி ஆரணி உள் வட்டத்துக்கு உட்பட்ட கிராம மக்களும், ஆரணி நகர மக்களும் மற்றும் விடுபட்ட கிராம மக்களும் மனுக்கள் தரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேத்துப்பட்டு போளூர் சட்டமன்ற உறுப்பினர் பங்கேற்பு:

சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தச்சாம்பாடி, தேவிகாபுரம், பெரிய கொழப்பலூர், நெடுங்குணம் ஆகிய கிராமங்களுக்கான ஜமாபந்தி தாலுகா அலுவலகத்தில் நடந்தது. தச்சாம்பாடி பிர்க்காவில் உள்ள செய்யானந்தல், தேவிமங்கலம், நம்பேடு, சேத்துப்பட்டு, மருத்துவம்பாடி, உலகம்பட்டு, கொத்தந்தவாடி, இந்திரவனம், சவரபூண்டி, கங்கைசூடாமணி, இளையாங்குளத்தூர் ஆகிய கிராமங்களுக்கு ஜமாபந்தி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை மாவட்ட தனித்துணை கலெக்டர் (சமூக நல பாதிப்பு) வெங்கடேசன் தலைமை தாங்கினார். தாசில்தார் கோவிந்தராஜ், சமூக நல தாசில்தார் குமரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் மகேந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்று, ஜமாபந்தியை தொடங்கி வைத்தார். 6-ந்தேதி தேவிகாபுரம், 7-ந்தேதி பெரிய கொழப்பலூர், 8-ந்தேதி நெடுங்குணம் ஆகிய பிர்க்காகளுக்கு ஜமாபந்தி நடக்கிறது. அந்தந்த ஊர்களில் உள்ள பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக கொடுக்கலாம், என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கலசபாக்கம்,வெறிச்சோடிய தாலுகா அலுவலகம்

கலசபாக்கம் தாலுகாவில் நடந்த ஜமாபந்தியில் மனுக்களை வழங்க மக்கள் யாரும் அதிகளவு வராததால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மனு வழங்க வந்த ஒரு சிலரிடம் மட்டும் ஆரணி கோட்டாட்சியர் கவிதா மனுக்களை பெற்றார். இதில் தாசில்தார் தட்சணாமூர்த்தி, சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் மலர்கொடி மற்றும் வருவாய்த்துறை மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஜமாபந்தி நடைபெறும் நாட்கள் இடங்கள் குறித்து சரியான முறையில் பொதுமக்களுக்கு அறிவிக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

அதிகாரிகளுக்கு எச்சரிக்கை:

செங்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாயத்தில் திருவண்ணாமலை கோட்டாட்சியா் வெற்றிவேல் சிறப்பு அலுவலராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு காலை 11 மணி வரை துறை அதிகாரிகள் யாரும் பங்கேற்கவில்லை. அதன்பிறகு, சில அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனா்.

இதனால் ஆத்திரமடைந்த கோட்டாட்சியா் வெற்றிவேல், கூட்டத்தில் கலந்துகொள்ளாத அதிகாரிகள் மீதும், பொதுமக்களின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் முனுசாமி, சமூகப் பாதுகாப்பு வட்டாட்சியா் ரேணுகா, துணை வட்டாட்சியா்கள் ஜெயபாரதி, தமிழரசி, கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் , சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!