கோடை வெயில் அதிகரிப்பால் வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்

கோடை வெயில் அதிகரிப்பால் வனப்பகுதியில் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி தீவிரம்
X

வனப்பகுதியில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர்  விடும் வனத்துறை ஊழியர்கள்.

கோடை வெயில் அதிகரித்து வருவதால் திருவண்ணாமலை வனப்பகுதியில் குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை அடுத்து மலை சுற்றும் பாதை அருகில் அடர்ந்த வனப் பகுதியாக விளங்குகிறது. இந்த வனப்பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மான்கள் மற்றும் காட்டுப்பன்றிகள், பாம்புகள், குரங்குகள், செந்நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகளை பாதுகாக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். காலை, மாலை நேரங்களில் வனவிலங்கு வேட்டை ஈடுபடுபவர்களை பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் அத்துமீறி வனப்பகுதியில் நுழைப்பவர்களுக்கு ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தி வருகிறது.இதனால் வனப்பகுதியில் உள்ள குளம் ,குட்டைகள் வறண்டு வருகின்றன. இதன்காரணமாக சில மான்கள் தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியில் வருவதாக கூறப்படுகிறது.கிரிவலப்பாதையில் குடிநீர் தொட்டிகளை தேடிவரும் மான்களை கிரிவலம் வரும் பக்தர்கள் கண்டு மகிழ்கின்றனர். இந்த நிலையில் தண்ணீர் தேடி வெளியில் வரும் மான்களை நாய்கள் கடித்து கொல்லும் சூழ்நிலை நிலவுவதால் வனப்பகுதியில் உள்ள 25 குடிநீர் தொட்டிகளில் வாகனங்கள் மூலம் தண்ணீர் கொண்டு சென்று நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக வனச்சரக அலுவலர் சீனுவாசனிடம் கேட்டபோது, கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பல குளம் குட்டைகளில் தண்ணீர் இருந்த போதும் சில இடங்களில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்காத சூழ்நிலை நிலவுகிறது. அதனை கருத்தில் கொண்டு வனவிலங்குகளுக்கு அமைக்கப்பட்ட 25 குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது வேலூர் வனபாதுகாவலர் சுஜாதா அறிவுரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அருண்லால் ஆலோசனைப் படி வனப்பகுதியில் 2000 பழம் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டு அவைகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பாதுகாக்கும் பணிகள் நடந்து வருகிறது. வனப்பகுதியில் உள்ள பழமரங்கள் கனிகளைத் தரும் காலம் வரும்போது குரங்குகள் தங்களுக்கு தேவையான இரைகளை வனப் பகுதியிலேயே தேடிக் கொள்ளும். இரைக்காக சாலைகளுக்கு வரும் அவசியம் இருக்காது என்றார் அவர்.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!