திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்காளருக்கு பூத் சிலிப், வழங்கும் பணி துவக்கம்

வாக்காளர்களுக்கு வாக்காளர் விவர சீட்டினை வீடு வீடாக சென்று வழங்கும் பணியினை தொடங்கி வைத்த ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டத்தில், 20.81 லட்சம் வாக்காளர்ககளுக்கு வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3482 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் ஒப்புகை ரசீது இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட வாக்காளா்களுக்கு தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், வாக்காளர் பெயர், போட்டோ, வாக்காளர் அடையாள அட்டை எண், வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட வாக்குச்சாவடி விபரம் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 20.81 லட்சம் வாக்காளர்களுக்கு, வாக்காளர் சீட்டுகள் (பூத் சிலிப்), வாக்குச்சாவடி நிலை அலுவலர், கிராம நிர்வாக அலுவலர், கிராம உதவியாளர் ஆகியோர் மூலம் வீடு வீடாக நேரில் சென்று வழங்கும் பணி தொடங்கியது. அதையொட்டி, திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சியில் வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார்.
அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப் தவறாமல் வழங்க வேண்டும். வீடு பூட்டியிருந்தாலோ அல்லது பணிக்கு சென்றிருந்தாலோ மறுமுறையும் அந்த முகவரிக்கு சென்று பூத் சிலிப் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தற்போது, வாக்காளர்களுக்கு வழங்கப்படும் பூத் சிலீப் வாக்குப்பதிவின்போது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்பட மாட்டாது. வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச்சாவடி உள்ளிட்ட விவரங்களை தெளிவாக அறிந்து கொள்வதற்காக மட்டுமே இது வழங்கப்படுகிறது. குறித்த நேரத்துக்கு, குறித்த வாக்குச்சாவடிக்குச் சென்று தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினாா்.
அப்போது, டிஆர்ஓ பிரியதர்ஷினி, தாசில்தார் தியாகராஜன் , வாக்குச்சாவடி நிலைய அலுவலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu