அருணாசலேஸ்வரா் கோயிலில் கூட்டம்: பக்தா்களிடையே மோதல்

அருணாசலேஸ்வரா் கோயிலில் கூட்டம்: பக்தா்களிடையே மோதல்
X

பக்தர்களிடையே ஏற்பட்ட மோதல்

ஆங்கில புத்தாண்டையொட்டி அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கோவிலுக்குள் செல்வதில் பக்தர்கள் இடையே மோதல்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் நேற்று (ஜன.1) சாமி தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு முறையாக வழிவகை செய்யாததால் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்ட வீடியோ பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் முக்கிய ஆன்மீக கோவில்களில் ஒன்றாகும்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தருகின்றனர். ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரிவலம் வருவதற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில் நேற்று புது வருட பிறப்பை முன்னிட்டு அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வெளி மாநிலங்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆங்கில புத்தாண்டையொட்டி, அதிகாலை 3.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, அதிகாலை 4 மணி முதலே பக்தா்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினா். காலை 8 மணிக்குப் பிறகு கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

மதியத்திற்குப் பிறகு பக்தர்களின் கூட்டம் வெகுவாக அதிகரிக்க தொடங்கியது. இதனால் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

பொது தரிசன வரிசையில் சுமாா் 6 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் சுமாா் 4 மணி நேரமும் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

பக்தா்கள் மோதல்..

கோயிலின் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக ஏராளமான பக்தா்கள் காத்திருந்தனா். கோயில் ஊழியா்கள் பக்தா்களை உள்ளே செல்ல அனுமதித்தபோது ஒரே நேரத்தில் பலா் முண்டியத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்தனா்.

கோவிலுக்கு உள்ளே செல்ல வரிசை முறையாக செய்யாததால் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு கோவிலுக்கு உள்ளே செல்ல முற்பட்டபோது பக்தர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

மேலும் கோயில் நிர்வாகம் கோவிலுக்குள் பக்தர்கள் செல்ல முறையாக வழிவகை செய்யவில்லை என பக்தர்கள் குற்றம் சாட்டினர். மேலும் பக்தர்கள் கூறுகையில், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் ஊழியர்களுக்கு சுவாமி தரிசனத்திற்கு வரும் விஐபிகளை அழைத்துச் செல்வதற்கு தான் நேரம் அதிகமாக உள்ளது , சாதாரண பக்தர்களை வரிசையில் அனுப்ப எந்தவிதமான ஏற்பாடும் செய்வதில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் இடையே வரிசையில் ஏற்பட்ட இந்த மோதல் சம்பவத்தால் அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!