காய்கறி வாகனத்தில் கடத்தப்பட்ட குட் கா பறிமுதல்

காய்கறி வாகனத்தில் கடத்தப்பட்ட குட் கா பறிமுதல்

கடத்தப்பட்ட   குட்காவை பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்த போலீசார்

திருவண்ணாமலை அருகே காய்கறி வாகனத்தில் மூட்டை மூட்டையாக பதுக்கி கடத்தப்பட்ட குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

வாணாபுரம் அருகே காய்கறி வாகனத்தில் முட்டைக்கோஸ் மூட்டைக்கு கீழே மூட்டை, மூட்டையாக பதுக்கி கடத்தப்பட்ட ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் கிராமிய துணை காவல் கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் கமல்ராஜ், வாணாபுரம் காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன், சவுந்தர்ராஜ் மற்றும் தனிப்பிரிவு காவல்துறையினர் அகரம்பள்ளிப்பட்டு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை மடக்கி சோதனை செய்தனர். அதில் இருந்த மூட்டைகளில் முட்டைகோஸ்கள் இருந்தன. அந்த மூட்டைகளுக்கு கீழ் சந்தேகப்படும்படியான பொருட்கள் மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்தன.

இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் முட்டைகோசை கீழே இறக்கியபோது அதன் கீழே மூட்டை மூட்டையாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் மினிவேனை வாணாபுரம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு டிரைவரிடம் விசாரணை செய்ததில் அவர் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா ஓலைபாடி பகுதியைச் சேர்ந்த மோகன் , என்பதும், பெங்களூரு பகுதியில் இருந்து முட்டைகோஸ் ஏற்றிக்கொண்டு அதன் கீழ் பகுதியில் 30 மூட்டைகளில் குட்காவை மறைத்து வைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குட்காவை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு சுமார் ரூ.3 லட்சம் ஆகும். மேலும் குட்கா, கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேன் ஆகியவற்றை பறிமுதல் செய்து மோகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மருத்துவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன் , டாக்டர். இவர் கடந்த 3 வருடங்களாக திருவண்ணாமலை தாமரை நகரில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி ஆன்மிக பணி மேற்கொண்டு வருகிறார்.

இவருக்கும் திருவண்ணாமலை ராமணாஸ்ரமம் பகுதியை சேர்ந்த மணிமாறன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து நாராயணனின் வீட்டிற்கு மணிமாறன் அவ்வப்போது வந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் இன்று அவர்கள் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த மணிமாறன் கத்தியால் நாராயணனை குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருவண்ணாமலை நகர காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து மணிமாறனை கைது செய்தனர்.

Tags

Next Story