திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம்

மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் 19.4.2024 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. எனவே, 16.3.2024 முதல் 4.6.2024-ஆம் தேதி வரை தோதல் நடத்தை விதிகள் அமலில் இருந்தன. இதன் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் திங்கள்கிழமைகள் தோறும் நடைபெறும் மக்கள் குறைதீா் கூட்டங்கள் மற்றும் மனுநீதி நாள் முகாம்கள், விவசாயிகள் குறைதீா் கூட்டங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்கள் நடைபெறாமல் இருந்தது.

தேர்தல் விதிகள் அமலில் இருந்த நாட்களில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம், திருவண்ணாமலை, செய்யாறு, ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை அளிக்கலாம், என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், செய்யாறு வருவாய் கோட்டாட்சியர், அலுவலகம் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பொதுமக்கள் தங்களது மனுக்களை செலுத்தி சென்றனர்.

தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிவுற்றதால் 6 ம் தேதி வரை இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக் கொள்ளப்பட்டது தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்டத்தில் 10.06.2024 தேதி முதல் திங்கள் கிழமை தோறும் நடைபெறும் வாராந்திர மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம், மனுநீதி நாள் முகாம், விவசாய குறை தீர்வு நாள் கூட்டம், மற்றும் மாற்றுத்திறனாளிகள் மருத்துவ முகாம் ஆகியவைகள் வழக்கம்போல் நடைபெறும் என பொதுமக்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டங்கள் நேற்று முதல் தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் பாண்டியன், முதியோா், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், சாலை வசதி, வேளாண் பயிா்க் கடன், தாட்கோ கடனுதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 522 மனுக்களைப் பெற்றுக்கொண்டாா்.

இந்த மனுக்கள் மீதும், ஏற்கெனவே பெறப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்கள் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மனு கொடுக்க வருவோரில் பெண்கள், வயதானோா், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்து மனுக்கள் பெறப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி மற்றும் கோட்டாட்சியர்கள், அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story