ஆரணியில் எடப்பாடியாருக்கு மிக பிரம்மாண்ட வரவேற்பு
எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து அக்ரியின் ஆதரவாளர்கள் வைத்த பேனர்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அதிமுக கூட்டணி கட்சித் தலைவர், எ. சி சண்முகம் கட்டியுள்ள கோயில் குடமுழுக்கு விழாவில் அதிமுக இணை ஒருக்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான பழனிசாமி கலந்து கொண்டார். இதற்காக சேலத்தில் இருந்து வருகை தந்த அவரை திருவண்ணாமலை மாவட்ட எல்லையான காட்டாம் பூண்டி கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை, கலசப்பாக்கம், போளூர், ஆரணி வரை மிகப்பிரம்மாண்டமான ஒரு வரவேற்பு கொடுத்து, திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி , எடப்பாடியை திக்குமுக்காட வைத்தார்.
பிரம்மாண்டம் என்றாலே திருவண்ணாமலை திமுக மாவட்ட செயலாளர் எ.வ. வேலு தான் என கலைஞரே பாராட்டுவார். அந்த அளவிற்கு அதிமுக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மிகப்பெரிய அளவில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டினார். அதிலும் குறிப்பாக அக்ரியின் ஆதரவாளர்கள் வைத்த பேனர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
அதில், ''எங்களின் ஒற்றைத் தலைமையே வருக வருக" மற்றும்" பொதுச் செயலாளரே வருக வருக'' என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான பேனர்களில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்தின் படங்கள் இல்லை. மேலும், பழனிசாமியை வரவேற்றபோது, ஒற்றைத் தலைமையே மற்றும் பொதுச் செயலாளரே என கட்சியினர் முழக்கமிட்டனர்.
இந்த பிரம்மாண்ட வரவேற்பு குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறும்போது, நேற்று பேட்டி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மற்றவர்கள் எல்லாம், யாருடைய மனமும் நோகாதவாறு ஒற்றைத் தலைமையை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்கள். யாரும் இவர்தான் ஒற்றைத் தலைமையாக வேண்டும் எனச் சொல்லவில்லை. அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரே ஒருவர் மட்டும்தான் எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையாக வர வேண்டும் என்று சொன்னார் எனத் தெரிவித்தார்.
இந்த விஷயம்தான் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரம் பேசப்பட்டது தொடங்கி, எல்லாமே திட்டம் தான் எனச் சந்தேகம் கிளப்பப்படுகிறது. அதற்கு ஏற்றார்போல், திருவண்ணாமலை முழுக்க, 'ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமி' என பேனர்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அமைக்கப்பட்டிருந்தன. ஒற்றைத் தலைமை குறித்து பேசியவர்களை கண்டிக்க வேண்டும் என ஓபிஎஸ் வலியுறுத்திய நிலையில், அப்படி குரல் எழுப்பியவர் நடத்திய பிரமாண்ட கூட்டத்தில் பங்கேற்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. ஆன்மீகத்திலும் அரசியலிலும் பல திருப்பு முனைகளை ஏற்படுத்தியது திருவண்ணாமலை தான்.
திமுக முதற்கொண்டு பல அரசியல் கட்சிகளை உருவாக்கிய இடமும் திருவண்ணாமலை தான். தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் திருவண்ணாமலையிலிருந்து மீண்டும் ஒரு அரசியல் மாற்றம் நிகழுமா என அரசியல் பார்வையாளர்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu