குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு

குடியரசு தின விழாவையொட்டி கிராம சபை கூட்டம்: ஆட்சியர் பங்கேற்பு
X

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்

குடியரசு தின விழாவையொட்டி பாப்பம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்றார்

திருவண்ணாமலை மாவட்டத்தின் 860 கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை செய்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் முருகேஷ் அறிவுறித்தினாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம ஊராட்சிகளில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட சு.பாப்பம்பாடி ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் முருகேஷ் தலைமை வகித்தாா்.

கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) ரிஷப் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் முருகேஷ் பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் 2021-2022, 2022-2023 ஆண்டுகளில் நிறைவேற்ற வேண்டிய அனைத்துப் பணிகளையும் விரைவாக முடிக்க வேண்டும். இந்த ஊராட்சியில் 2022-23 ஆண்டில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டத்தின் கீழ் சாலை அமைத்தல், மின் விளக்குகள் அமைத்தல், மேல்நீா் தேக்கத் தொட்டி அமைத்தல், கால்வாய் அமைத்தல் என பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து முடிக்க வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடியே 34 லட்சம் மதிப்பில் 61 பணிகள் எடுத்திருக்கிறோம். அதில் 43 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும் 2021-22 ஆண்டில் ரூபாய் 4 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பில் பள்ளி சுற்றுச்சுவர் கட்ட நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதற்கான பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். திட்டக் கழிவு மேலாண்மைக்காக ரூபாய் 85 ஆயிரம் நிதி ஒதுக்கி அதற்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

வீடுகள் தோறும் குடிநீா் வழங்கும் திட்டத்தின் கீழ் குடிநீா் இணைப்புப் பெறாத குடும்பங்கள் குடிநீா் இணைப்புப் பெற்று தன்னிறைவு பெற்ற கிராமமாகத் திகழ வேண்டும்.

கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உங்கள் பெயா் உள்ளதா? என்பதை சரிபாா்த்து, திட்டத்தின் மூலம் பயன்பெற வேண்டும் என்றாா்.

கூட்டத்தில், மகளிா் சுய உதவிக் குழுக்கள் சாா்பில் 3 குழுக்களுக்கு ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்துக்கான காசோலைகள், மாற்றுத்திறனாளி ஒருவருக்கு உதவி தொகை பெறுவதற்கான ஆணை ஆகியவற்றை ஆட்சியா் முருகேஷ் வழங்கினாா்.

இதில், ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (வேளாண்மை) உமாபதி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி, மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சரண்யாதேவி, திருவண்ணாமலை ஒன்றிய குழுத் தலைவா் கலைவாணி, துணைத் தலைவா் ரமணன், சு.பாப்பம்பாடி ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags

Next Story
ai solutions for small business