கிரிவலப் பாதை ஆக்கிரமிப்புகள்: உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆய்வு
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜ்
திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில், மகா தீபம் ஏற்றும் மலை மீது நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மலையின் புனிதம் கெடுவதாக பக்தா்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.
வெளி மாநிலங்கள் வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு புனித பயணமாக வருகின்றனர். அதிலும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினமன்று கிட்டத்தட்ட 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வருகின்றனர்.
அவ்வாறு வரும் பக்தர்களுக்கு தங்குவதற்காக ஏராளமான விடுதிகள் திருவண்ணாமலையில் அதிலும் குறிப்பாக கிரிவலப் பாதையில் புதிது புதிதாக கட்டப்பட துவங்கியுள்ளது. அதிலும் அருணாச்சலேஸ்வரர் மலையின் ஒட்டி புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
சட்ட விரோதமாக கிரிவலப் பாதையின் இருபுறமும் கட்டப்பட்டுள்ள, கட்டப்பட்டு வரும் கட்டிடங்களை அகற்றக்கோரி உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் மூத்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து மலையில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
அதன்படி வழக்கறிஞர் எம்.சி.சுவாமி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் வருவாய் துறை வனத்துறையினர், இந்து சமய அறநிலையத்துறை இணை இயக்குனர், கிரிவலப் பாதை முழுவதும் ஆய்வு செய்து தனது அறிக்கையினை சமர்ப்பித்துள்ளனர்
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றம் ஏற்கனவே நியமித்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி குழு தாக்கல் செய்த அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
அதேபோல கிரிவலப்பாதை மற்றும் மலையை ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு சட்டவிரோதமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் யானை ராஜேந்திரனும் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையி்ல், நில நிர்வாக ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அறநிலையத் துறை இணை ஆணையர், வனப்பாதுகாவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இக்குழு அவ்வப்போது ஆய்வு நடத்தி, ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது, பட்டாக்களை ரத்து செய்வது குறித்து அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இப்பணிகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி குழுவுக்கு உத்தரவிட்டு,விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆய்வு
இந்நிலையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜ், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை, வனத் துறை, அறநிலையத் துறை, காவல் துறை, நகராட்சி நிா்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
அப்போது, மகா தீபம் ஏற்றும் மலை மீதுள்ள ஆக்கிரமிப்புகள், கிரிவலப் பாதையை ஒட்டியுள்ள குளங்களின் ஆக்கிரமிப்புகள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்த அவா், கூடுதல் தகவல்களை சேகரித்து வைக்க வேண்டும். அடுத்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கலாம் என்று அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வு கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu