செங்கம் பகுதியில் தொடரும் விபத்துக்கள்: டிஐஜி ஆய்வு

செங்கம் பகுதியில் தொடரும் விபத்துக்கள்: டிஐஜி ஆய்வு
X

செங்கம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட டி ஐ ஜி  மற்றும் மாவட்ட எஸ்பி

செங்கம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து டிஐஜி ஆய்வு செய்தார்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் சாலை விபத்துகளை தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் பகுதியில் கடந்த 10 நாட்களில் நடைபெற்ற இரு வேறு சாலை விபத்துகளில் 15 பேர் உயிரிழந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த அக். 15-ம் தேதி மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலுக்கு சென்று பெங்களூரு திரும்பிக்கொண்டிருந்த காரும், லாரியும் பக்கிரிப்பாளையம் பகுதியில் மோதிக்கொண்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, புதுச்சேரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற டாடா சுமோவும், அரசுப் பேருந்தும் கடந்த திங்கட் கிழமை இரவு மோதிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில், வேலூா் சரக காவல்துறை துணைத் தலைவா் முத்துசாமி திருவண்ணாமலை-பெங்களூரு சாலையில் திருவண்ணாமலை நகரில் இருந்து செங்கம் காவல் உட்கோட்ட எல்லை முடிந்து கிருஷ்ணகிரி மாவட்ட எல்லை தொடங்கும இடம் வரை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அய்யம்பாளையம், பாளையம்பட்டு, பெரிய கோளாம்பாடி, பெரியகுளம், பாய்ச்சல், இறையூர், கொட்டாங்குளம், இருமாங்குளம் உள்ளிட்ட முக்கிய சந்திப்பு பகுதிகளில் கள ஆய்வும் நடத்தப்பட்டது. மேலும் ஆய்வின் முடிவுகள் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும் சாலை பாதுகாப்பு கூட்டத்தில் விவாதித்து குறைபாடுகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துகளை தடுக்க டிஐஜி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தார். அதன்படி

  • சில இடங்களில் சாலைகள் வளைந்து செல்வதால் அந்தப் பகுதிகளில் ஒளிரும் சிகப்பு விளக்குகளை பொருத்த வேண்டும்.
  • தேவையான இடங்களில் கூடுதலாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.
  • முக்கிய சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான ஒளிரும் சிகப்பு விளக்குகளைபொருத்த வேண்டும்.
  • வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த தேவையான இடங்களில் தடுப்புகள் வைக்க வேண்டும்.
  • சாலையோரங்களில் சாலையை மறைக்கும் வகையில் உள்ள செடிகளை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு டிஐஜி முத்துசாமி உத்தரவிட்டாா்.

ஆய்வின்போது, திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் தயாளன், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலா்கள், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோா் உடனிருந்தனா்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!