போதைப் பொருட்களுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும்: அமைச்சர் எ. வ. வேலு
போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அமைச்சர் வாசிக்க, மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கிரி, சரவணன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் கம்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு கலந்து கொண்டு பேசியதாவது:
ஒழுக்கம் மட்டும் வாழ்க்கையில் கடைபிடித்தால் பல்வேறு நிலைக்கு முன்னேற முடியும். ஒழுக்கத்தை கெடுக்கும் வகையில் இன்றைக்கு போதை பொருட்கள் பலரை ஆட்டிப்படைக்கிறது. போதை பொருட்களுக்கு அடிமையாகி இன்றைக்கு பல்வேறு குடும்பங்கள் சீர்கெட்டு உள்ளது. இந்த போதை பழக்கத்தால் நண்பர்கள், உறவுகளை நாம் இழக்கிறோம். மேலும் சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக கருத கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறோம். அதனால் போதை பொருட்களுக்கு எதிராக தமிழகத்தில் ஜனநாயக போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்து வருகிறது அதுபோல போதைப் பொருட்கள் இல்லாத தமிழகத்தில் உருவாக்க முதல்வர் நினைக்கிறார்கள். முதல்வர் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் போதை பொருட்கள் தடுப்பு குறித்த மாநாடு நடைபெற்றது முதல்வர் தமிழ்நாடு போதை பொருட்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் எனவும் இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
திருவண்ணாமலை ஆன்மீக நகரமாக இருப்பதால் பல்வேறு மாநிலத்தில் இருந்து பொதுமக்கள் வருகிறார்கள். அதனால் நமது காவல்துறை இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் போதை பொருட்கள் தடுப்பதற்கு காவல்துறை இரவில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும்.
முதல்வரிடம் கிரிவலப் பாதைக்கு என தனியாக காவல் நிலையம் வேண்டும் என மனு அளித்திருக்கிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தில் எந்த நிலையிலும் போதை பொருட்கள் நுழைய முடியாது என்ற நிலையை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும். ஆசிரியர்கள் நினைத்தால் மாணவர்களை பக்குவப்படுத்த முடியும். பள்ளி ஆசிரியர்கள் சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும். திருவண்ணாமலை மாவட்டம் வரும் காலத்தில் போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் முன்னின்று பாடுபட வேண்டும்.
பின்னர் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை அமைச்சர் வாசிக்க மாணவர்கள்,மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, ஆர்டிஓ வெற்றிவேல், திருவண்ணாமலை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், நகர செயலாளர் கார்த்திவேல்மாறன், ஒன்றிய செயலாளர் ஆராஞ்சி ஆறுமுகம் உள்பட பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu